மேலும் ரூ.13.64 லட்சம் கோடி பொருள்கள் மீது கூடுதல் வரி: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: அதிகரிக்கிறது வர்த்தகப் போர் பதற்றம்

சீனாவின் முறையற்ற' வர்த்தகக் கொள்கைகள் தொடர்ந்தால், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.13.64 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி
மேலும் ரூ.13.64 லட்சம் கோடி பொருள்கள் மீது கூடுதல் வரி: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை: அதிகரிக்கிறது வர்த்தகப் போர் பதற்றம்

சீனாவின் முறையற்ற' வர்த்தகக் கொள்கைகள் தொடர்ந்தால், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.13.64 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாடும் அமெரிக்கப் பொருள் மீது வரிப்பதாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பை சீனா செயல்படுத்தினால், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 20,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா தனது முறையற்ற வர்த்தகக் கொள்கைகளைக் கைவிடச் செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு போன்ற உலோகப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார்.
மேலும், சுமார் 6,000 கோடி டாலர் (ரூ.3.9 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
இதற்குப் பதிலடியாக, 300 கோடி டாலர் (ரூ.19,500 கோடி) மதிப்பு கொண்ட 128 வகை அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக சீனாவும் அறிவித்தது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்று அச்சம் எழுந்தது.
அதையடுத்து, வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனிலும், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் இரு நாட்டு அதிகாரிகள் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், வேளாண்மை, எரிசக்தி போன்ற துறைகளில் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது குறித்து கருத்தொற்றுமை ஏற்பட்டது.
எனினும், இதுதொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 5,000 கோடி டாலர் மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
சீனாவின் தொழில்நுட்பத் திருட்டு, முறையற்ற வணிகக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த அறிவிப்புக்குப் பதிலடியாக, அதே மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது.
இந்தச் சூழலில், அமெரிக்கா தற்போது விடுத்துள்ள எச்சரிக்கையால் உலகின் இரு பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com