பெற்றோர்களிடமிருந்து அகதி சிறுவர்கள் பிரிப்பு: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப்

அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோரிடம் இருந்து அவர்களது குழந்தைகளை தனியாக பிரித்து வைக்கும் கொள்கையை திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
பெற்றோர்களிடமிருந்து அகதி சிறுவர்கள் பிரிப்பு: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப்

அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோரிடம் இருந்து அவர்களது குழந்தைகளை தனியாக பிரித்து வைக்கும் கொள்கையை திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மனித உரிமை மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பல்வேறு அமைப்புகளும், தலைவர்களும் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து சிறுவர்கள் தனியாக பிரிக்கப்படுவதற்கு டிரம்ப்பின் மனைவி மெலானியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான டிரம்ப்பின் அதிதீவிர கொள்கைப்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, இரக்கம் அற்ற, அநீதியான செயல் என அவர் விமர்சித்திருந்தார்.

அகதிகளாக வரும் குடும்பங்களில் இருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படுவதை பார்க்கவே சகிக்கவில்லை என்றும், நாடு என்பது சட்ட திட்டங்களை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் விரும்பினாலும், அந்த நாட்டின் அரசு இதயமே இல்லாமல் செயல்படக் கூடாது என்றும் மெலானியா வலியுறுத்தியிருந்தார்.

டிரம்ப் அறிவித்த கொள்கையின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் அகதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதே குழந்தைகளைப் பிரிக்கக் காரணம் என்று கூறப்பட்டது.

பெரியவர்களுடன் வரும் சிறுவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அவர்கள் பிரத்யேக காப்பகங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி முதல், மே மாதம் 31-ஆம் தேதி வரை மட்டும் அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து 1,995 சிறுவர்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவிலும், மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com