அகதி சிறுவர்களை பெற்றோர்களிடமிருந்து பிரிக்கும் நடைமுறை ரத்து: கடும் சர்ச்சைக்குப் பிறகு டிரம்ப் உத்தரவு

அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து சிறுவர்கள் தனியாக பிரிக்கப்படும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முடிவு கட்டும்
அரசாணையில் கையெழுத்திடும் டிரம்ப். உடன் (இடது) உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ்ட்ஜென் நீல்ஸன் மற்றும் துணை அதிபர் மைக்கேல் பென்ஸ்.
அரசாணையில் கையெழுத்திடும் டிரம்ப். உடன் (இடது) உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ்ட்ஜென் நீல்ஸன் மற்றும் துணை அதிபர் மைக்கேல் பென்ஸ்.

அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து சிறுவர்கள் தனியாக பிரிக்கப்படும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முடிவு கட்டும் அரசாணையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிறுவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் படங்களும், குழந்தை பெற்றோருக்காக ஏங்கி அழும் ஒலிப்பதிவும் வெளியாகி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், சட்ட விரோதக் குடியேற்றங்களுக்கு எதிராக அவர் அண்மையில் அறிவித்திருந்த இரும்புக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான அரசாணையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறும் பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளைத் தனியாகப் பிரிக்க வேண்டாம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சூழலில் அவர்களிடமிருந்து குழந்தைகளை தனியாகப் பிரிக்கலாம் என்றும் அந்த அரசாணையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்குப் பிறகு, குடும்பங்கள் பிரிக்கப்படாது. குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாகவே இருப்பார்கள். இதனால், தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்குத் தீர்வு ஏற்படும்.
எனினும், சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான எனது இரும்புக் கொள்கை தொடரும். அமெரிக்க எல்லைகள் வழக்கமான உறுதியுடன் பாதுகாக்கப்படும்.
சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கும் நுழைய முற்படுபவர்களுக்கு துளியும் சலுகை அளிக்கப்படாது என்றார் அவர்.
அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தஞ்சம் புகுவதற்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட இரும்புக் கொள்கை அறிவிப்புக்குப் பிறகு, எல்லை தாண்டி வரும் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய கொள்கையின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் அகதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
பெரியவர்களுடன் வரும் சிறுவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அவர்கள் பிரத்யேக காப்பகங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.
கடந்த சில வாரங்களில் மட்டும் அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து 2,500-க்கும் மேற்பட்ட சிறுவர்களும், குழந்தைகளும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், கம்பிகளுக்குப் பின்னால் அகதி சிறுவர்கள் அடைக்கப்பட்ட காட்சிகளும், அகதி குழந்தை ஒன்று தனது பெற்றோருக்காக ஏங்கி அழும் உருக்கமான ஒலிப்பதிவும் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.
இது, உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அகதி குடும்பத்தைப் பிரிக்கும் நடைமுறைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா, மகள் இவாங்கா ஆகியோரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான டிரம்ப்பின் இரும்புக் கொள்கைப்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, இரக்கம் அற்ற, அநீதியான செயல் என மெலானியா டிரம்ப் விமர்சித்தார்.
இந்த நடைமுறைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் மனைவி லாரா புஷ்ஷும் கண்டனம் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிரம்ப் தற்போது இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com