இலங்கை வன்முறை எதிரொலி: சமூக வலைதளங்களுக்குத் தடை

இலங்கையின் கண்டியில் புத்த, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக சமூக வலைதளப் பக்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வன்முறை எதிரொலி: சமூக வலைதளங்களுக்குத் தடை

இலங்கையின் கண்டி மாவட்டம் தெல்டினியா பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிம்களால் கடந்த 22-ஆம் தேதி தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தார்.

கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 மசூதிகள், 32 வீடுகள், 75 கடைகள் சேதப்படுத்தப்பட்டன. 

இதையடுத்து, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவமும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர். மேலும், 10 நாள்களுக்கு அவசரநிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளப் பக்கங்களுக்கு புதன்கிழமை தடை விதித்து அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வைபர், வாட்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு இலங்கையில் தடை விதிக்கப்படுகிறது.

வன்முறையைக் கட்டுப்படுத்தும் விதமாக, பாதுகாப்புத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்க முடியும். அவ்வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com