ஹஃபீஸ் சயீதை கைது செய்ய பாகிஸ்தான் அரசுக்கு தடை: லாகூர் உயர் நீதிமன்றம்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு கைது செய்வதற்கு லாகூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஹஃபீஸ் சயீத் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், 'அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நெருக்கடிகளுக்கு பணிந்து, என்னை பாகிஸ்தான் மத்திய அரசும், பஞ்சாப் மாகாண அரசும் கைது செய்து வீட்டுக் காவலில் வைக்க வாய்ப்புள்ளது.ஆதலால் கைது செய்வதில் இருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, லாகூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அமீனுதீன் கான் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், ' இந்த வழக்கில் நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையிலும், ஹஃபீஸ் சயீதை கைது செய்யவோ அல்லது வீட்டுக் காவலில் வைக்கவோ தடை விதிக்கப்படுகிறது' என்றார்.
அதேபோல், இந்த வழக்கில் பாகிஸ்தான் மத்திய அரசும், பஞ்சாப் மாகாண அரசும் தங்களது பதில்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதற்கு நீதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டார். மேலும், இரு அரசுகளும் தங்களது பதில்களை தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அமெரிக்க அரசால் ஹஃபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதியாக கடந்த 2012ஆம் ஆண்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளார். 
இதையடுத்து, அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 மில்லியன் டாலர்கள் வெகுமதியாக அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டில் கடல்வழியாக வந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மூளையாக ஹஃபீஸ் சயீத் செயல்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. ஹஃபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com