சிரியாவில் கடந்த 2 வாரங்களில் 1,000 பேர் கொலை

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 2 வாரங்களில் மட்டும் 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக எம்எஸ்எஃப் என்கிற அமைப்புவெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த 2 வாரங்களில் 1,000 பேர் கொலை

சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த கடந்த 2012-ஆம் ஆண்டில், கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அதிலிருந்து இந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

எனினும், கடந்த ஓராண்டாக மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு, கிழக்கு கெளட்டா பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை ராணுவம் மீட்டது. மேலும் கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களையும், எல்லைக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல்களையும் நிகழ்த்தி வருகின்றன.

மேலும் இங்கு புதிய ராணுவப் பதற்றம் உருவாகி வருவதால், நிவாரணப் பொருள்களை கொண்டு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. எனினும் இதற்காக ஐநா சபை மற்றும் ரஷிய அதிபர் விளாடிமர் புதின் ஆகியோர் தலையிட்டு பொதுமக்கள் வெளியேறவும், போதிய நிவாரணம் சென்றடையவும் அவ்வப்போதாவது போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. நிவாரணம் சென்றடைவதற்கு தற்காலிக போர் நிறுவத்த அறிவிப்புகள் மீறப்படுவதாக சிரியா அரசுப் படைகளும், கிளர்ச்சிக் குழுக்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

சிரியா விவகாரம் குறித்து எம்எஸ்எஃப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவிக்கையில், 

தொடர் கோரிக்கைகளுக்கு மத்தியிலும் தற்காலிக போர் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதில்லை. இதனால் மருத்துவ, நிவாரண உதவிகள் சென்றடைவதில் சிக்கல் நீடிக்கிறது. போர் நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர். அங்குள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 

இங்கு போர் காரணமாக கொல்லப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவ, நிவாரண மையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படு அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 1,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 4,800 பேர் வரை பலத்த காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com