பதிலடி: பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்யா உத்தரவு

முன்னாள் உளவாளி மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 23 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
பதிலடி: பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்யா உத்தரவு

மாஸ்கோ: முன்னாள் உளவாளி மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 23 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 பிரிட்டன் அதிகாரிகளை உடனடியாக வெளியறே ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒரு வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகக் குற்றம்சாட்டி, அந்நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு பிரிட்டன் உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே அறிவித்ததாவது:
முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம்.

ரஷியாவின் இந்தக் கொலை முயற்சிக்கு எதிராக, அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பேச்சுவார்த்தைக்காக பிரிட்டனுக்கு வருமாறு ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ரஷியத் தூதரகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகள் ரகசிய உளவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும் என்றார் தெரசே மே.

ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.

எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்தனர்.

அதையடுத்து, ராணுவ ரகசியங்களைக் கசியவிட்டதன் மூலம் தேசத் துரோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், செர்கெய் ஸ்கிரிபாலும், மேலும் இரு கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். ஸ்கிரிபாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் அளித்தது. இதையடுத்து, வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரில் தனது மகளுடன் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் செர்கெய் ஸ்க்ரிபாலும், அவரது 33 வயது மகள் யுலியாவும் பூங்கா ஒன்றில் இந்த மாதம் 4-ஆம் தேதி மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அவர்கள் மீது மர்ம நச்சுப்பொருள் செலுத்தப்பட்டதன் காரணமாக அவர்களது உடல்நிலை ஆபத்தான நிலையை அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு ரஷியாவே காரணம் என்று பிரிட்டன் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரஷியாவுக்கு தெரசா மே கெடு விதித்திருந்தார்.

அந்த கெடுவுக்குள் ரஷியா விளக்கமளிக்காவிட்டால், அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், பிரிட்டனின் குற்றச்சாட்டை மறுத்து வரும் ரஷியா, தங்கள் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்குமான எதிர்வினையை பிரிட்டன் சந்திக்க வேண்டியிருக்கும் என்று செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தெரசா மே அறிவித்ததும், அதற்கு ரஷ்யா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com