காஸா துப்பாக்கிச் சூடு குறித்து போர் குற்ற விசாரணை: ஐ.நா. பரிசீலனை

சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச போர்
காஸா துப்பாக்கிச் சூடு குறித்து போர் குற்ற விசாரணை: ஐ.நா. பரிசீலனை

சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது 60 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச போர் குற்ற விசாரணை மேற்கொள்வது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக 47 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வரைந்துள்ள தீர்மானம் குறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை விவாதித்தது.
அந்த வரைவுத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் காஸா எல்லையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது மிகப் பெரிய ராணுவத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை இஸ்ரேல் அனைத்து விதங்களிலும் மீறியுள்ளது.
எனவே, அங்கு நடைபெற்ற சம்பவங்களின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக, சர்வதேச போர் குற்ற விசாரணைக் குழுவை அந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருலசேம் நகருக்கு அமெரிக்கா கடந்த திங்கள்கிழமை மாற்றிக் கொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஸா எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் எல்லை அருகே தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டயர்களை கொளுத்தியும், பெட்ரோல் குண்டுகளை வீசியும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் . அவர்களைக் கலைக்க, இஸ்ரேல் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இந்த மோதலில், 60 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டு வீசியதாகவும், இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பலர் எல்லையைத் தாண்டி ஊடுருவி வந்ததாகவும் குற்றம் சாட்டிய இஸ்ரேல், ஊடுருவலைத் தடுக்கவே துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com