அருணாசல் எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுகிறது சீனா: மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு

அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு அதிநவீன கட்டுமானப் பணிகளை அப்பகுதிகளில் அந்நாடு மேற்கொண்டு
அருணாசல் எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுகிறது சீனா: மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு

அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு அதிநவீன கட்டுமானப் பணிகளை அப்பகுதிகளில் அந்நாடு மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட பகுதியில் சுமார் 6000 கோடி டாலர்கள் (சுமார் ரூ.4 லட்சம் கோடி) மதிப்புக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட கனிமத் தாதுக்கள் நிறைந்திருப்பதாக சீன அறிவியலாளர்கள் கண்டறிந்ததை அடுத்து இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் "மார்னிங் போஸ்ட்' நாளிதழில் இடம்பெற்றுள்ளன.
கனிமங்களை வெட்டியெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா மேற்கொண்டு வருவது, அருணாசலப் பிரதேசத்தை மீட்பதற்கான ஒரு முன்னோட்டம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்கு அருகே மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளானது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. 
டோக்கா லாம் பிரச்னை காரணமாக கடந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையே அசாதாரண சூழல் நிலவியது. ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனிடையே, கடந்த டிசம்பர் இறுதியில் அருணசாலப் பிரதேசத்தின் பைசிங் பகுதியில் சாலை செப்பனிடும் வாகனங்களுடன் (புல்டோஸர்கள்) சீனப் படைகள் மக்களோடு, மக்களாக ஊடுருவியதும் இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசலுக்கு வித்திட்டது.
அந்தப் பதற்றங்கள் சற்று தணிந்து நிலைமை சுமுகமாகிவிட்டதாகக் கருதியிருந்த நிலையில், சீன வீரர்கள் இந்திய எல்லை அருகே அதிநவீன ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்அண்மையில் செய்தி வெளியிட்டன. க்யூடிஎஸ்-11 எனப்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின்னணு இயந்திர ஆயுதங்கள் ஒவ்வொரு சீன வீரர்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் இந்தியா அதிருப்தியடைந்தது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், சீன வெளியுறவு விவகாரங்கள் துறை ஆணையர் யாங் ஜேய்சி ஆகியோர் அண்மையில் சந்தித்துப் பேசினர். அதைத் தவிர, இரு நாட்டு பொருளாதாரக் குழு கூட்டத்திலும் இந்திய - சீன பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.
இதற்கு நடுவே இந்திய பிரதமர் மோடி, கடந்த மாதம் சீனாவில் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷீ ஜின் பிங்கைச் சந்சித்துப் பேசினார். இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னைகள் சுமூகமானது.
இந்த நிலையில், தற்போது சீனா முன்னெடுத்திருக்கும் தங்கச் சுரங்கப் பணிகள் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்துக்கு வித்திடுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com