வர்த்தகப் போரைத் தவிர்க்க அமெரிக்காவிடமிருந்து கூடுதல் இறக்குமதி: சீனா சம்மதம்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்கப் பொருள்களை கூடுதலாக இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
வர்த்தகப் போரைத் தவிர்க்க அமெரிக்காவிடமிருந்து கூடுதல் இறக்குமதி: சீனா சம்மதம்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்கப் பொருள்களை கூடுதலாக இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அண்மைக் கால அறிவிப்புகளால் உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயம் எழுந்தது.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு 37,500 கோடி டாலர் (சுமார் ரூ.25.5 லட்சம் கோடி) அதிகமாக இருப்பதால், அந்த வர்த்தகப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சீனப் பொருள்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு போன்ற உலோகப் பொருள்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவை அவர் பிறப்பித்தார்.
மேலும், சுமார் 6,000 கோடி டாலர் (ரூ.3.9 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
இதற்குப் பதிலடியாக, 300 கோடி டாலர் (ரூ.19,500 கோடி) மதிப்பு கொண்ட 128 வகை அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக சீனாவும் அறிவித்தது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் வெடிக்கும் என்று அஞ்சப்பட்டதால், சர்வதேச பங்குச் சந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்காவும், சீனாவும் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தின.
இந்த நிலையில், அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற மிக நீண்ட இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வர்த்தகப் போரைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், அந்த நாட்டிட
மிருந்து கூடுதல் பொருள்களை இறக்குமதி செய்ய சீனா ஒப்புக் கொண்டதாக இரு நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சீன மக்களின் அதிகரித்து வரும் நுகர்வுத் தேவையை நிறைவு செய்யும் வகையிலும், தரமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையிலும் அமெரிக்காவின் பொருள்கள் மற்றும் சேவை இறக்குமதியை கணிசமான அளவில் அதிகரிக்க சீனா முடிவு செய்துள்ளது' என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com