வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தை ரத்து: டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தை ரத்து: டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார்.
வடகொரியா தனது அணுஆயுத சோதனை கூடத்தை அழித்து விட்டதாக தெரிவித்த சில மணி நேரங்களில், டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-க்கு டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், "உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நான் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருந்தேன். ஆனால் அண்மையில் வெளியான உங்களது அறிவிப்பில் பகைமை வெளிப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஆத்திரமும் வெளிப்பட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்து பார்க்கையில், உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இது உகந்த நேரம் அல்ல என்று நான் நினைத்தேன். ஆதலால், இரு நாடுகள் நலன் கருதி, சிங்கப்பூரில் உங்களுடன் ஜூன் 12இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்
கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை: இதேபோல், அந்த கடிதத்தில் கிம் ஜாங் உன்-க்கு டிரம்ப் வெளிப்படையாக எச்சரிக்கையும் விட்டிருந்தார். இதுகுறித்து அவர் அந்த கடிதத்தில், "அணுஆயுத திறன் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்; ஆனால் எங்கள் நாட்டிடம் மிகப்பெரிய எண்ணிக்கையில் அணுஆயுதங்கள் இருக்கின்றன. அந்த ஆயுதங்கள் அனைத்தும் சக்திவாய்ந்தவை. அவற்றை (வடகொரியாவுக்கு எதிராக) பயன்படுத்தும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு வந்துவிடக் கூடாது என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், வடகொரியாவால் நீண்டகாலம் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்கள் 3 பேரை விடுதலை செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தை சுட்டுரை பக்கத்திலும் டிரம்ப் வெளியிட்டிருந்தார்.
ஐ.நா. பொதுச் செயலர் கவலை: இதனிடையே, வடகொரிய அதிபருடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருப்பதற்கு தமது ஆழ்ந்த கவலையை ஐ.நா. சபை பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளும் அமைதி மற்றும் அணுஆயுதமில்லாத கொரீய தீபகற்பத்தை ஏற்படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com