வங்கதேசம்: தேர்தலில் போட்டியிட கலீதாவுக்குத் தடை

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு
வங்கதேசம்: தேர்தலில் போட்டியிட கலீதாவுக்குத் தடை


ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அட்டார்னி ஜெனரல் மஹ்பூபே ஆலம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இரண்டு ஊழல் வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை டாக்கா உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
இதையடுத்து, அடுத்த மாதம் 30-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்கள், அவர்களது மேல்முறையீட்டு மனு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது என்றார் ஆலம்.
ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தொகையை முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் கலீதா ஜியாவுக்கும், தாரிக் ரஹ்மானுக்கும் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், அந்தத் தண்டனையை நீதிமன்றம் பிறகு இரட்டிப்பாக்கியது.
இதற்கிடையே, அறக்கட்டளை முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கில் கலீதாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட தற்போது அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு வீச்சு தொடர்பான வழக்கில், கலீதா ஜியாவின் தலைமறைவாகியுள்ள மகன் தாரிக் ரஹ்மானுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
24 பேரை பலி கொண்ட அந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com