பிரிட்டன்: இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மருத்துவ காப்பீட்டு கட்டணம் உயர்கிறது

இந்தியா உள்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ காப்பீட்டுக் கட்டணம், பிரிட்டனில் வரும் டிசம்பர் மாதம் முதல் உயர்கிறது. இதனால், பிரிட்டனுக்கு

இந்தியா உள்பட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ காப்பீட்டுக் கட்டணம், பிரிட்டனில் வரும் டிசம்பர் மாதம் முதல் உயர்கிறது. இதனால், பிரிட்டனுக்கு கல்வி கற்பதற்காக செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், தொழில் நிமித்தமாக செல்வோர் விசா பெற விண்ணப்பிக்கும்போது கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
 பிரிட்டனில் தேசிய சுகாதார சேவைகள் திட்டத்தின் கீழ் அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டில் 6 மாதத்துக்கு மேல் தங்கும் இந்தியர்கள் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத வெளிநாட்டினருக்கு மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்திட்டம், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
 அதன்படி, பிரிட்டனில் தொழில் நிமித்தமாக தங்கும் வெளிநாட்டினருக்கு ஆண்டொன்றுக்கு 200 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு சற்று சலுகை அளிக்கும் விதமாக ஆண்டுக்கு 150 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகையை பிரிட்டன் செல்வதற்காக விசா பெற விண்ணப்பிக்கும்போதே வெளிநாட்டினர் செலுத்தியாக வேண்டும். இத்திட்டத்தின் கீழ், பிரிட்டனில் தங்கும் வெளிநாட்டினர், அங்குள்ள மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
 இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழில் நிமித்தமாக பிரிட்டனில் தங்கும் வெளிநாட்டினரின் மருத்துவ காப்பீட்டுத் தொகையை 200 பவுண்டுகளில் இருந்து 400 பவுண்டுகளாகவும், மாணவர்களுக்கான கட்டணத்தை 150 பவுண்டுகளில் இருந்து 300 பவுண்டுகளாகவும் உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
 இது தொடர்பான பரிந்துரை அறிக்கை, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து மருத்துவ காப்பீட்டுக் கட்டணம் உயர்வு அமலுக்கு வரும்.
 இதுகுறித்து பிரிட்டன் குடியேற்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கரோலின் நோக்ஸ் கூறிதாவது:
 கடந்த 2015-ஆம் ஆண்டு, இத்திட்டம் அமலான பிறகு 60 கோடி பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டது. தற்போது காப்பீட்டுத் திட்டத்துக்கான கட்டணத்தை உயர்த்துவதால் கூடுதலாக 22 கோடி பவுண்டுகள் நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 சராசரியாக நபர் ஒருவருக்கு ஆண்டொன்றுக்கு 470 பவுண்டுகள் செலவிடப்படுகிறது.
 இந்நிலையில், காப்பீட்டு கட்டணத்தை உயர்த்துவதால், வெளிநாட்டினருக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com