தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை: சவூதி ஒப்புதல்

துருக்கியிலுள்ள தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொலை செய்யப்பட்டதை முதல் முறையாக சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.
தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி படுகொலை: சவூதி ஒப்புதல்

துருக்கியிலுள்ள தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொலை செய்யப்பட்டதை முதல் முறையாக சவூதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது.
 மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்ததாகவும், 18 பேரை கைது செய்துள்ளதாகவும் அந்த நாடு அறிவித்துள்ளது.
 இதுகுறித்து சவூதி அரசின் தலைமை வழக்குரைஞர் ஷேக் சவூத் அல்-முஜீப் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற செய்தியாளர் ஜமால் கஷோகி, அதன் பிறகு மாயமானது குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது.
 அதில், தூதரகத்துக்குள் வந்த கஷோகிக்கும், அங்கிருந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
 பிறகு அந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஜலால் கஷோகி உயிரிழந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி லண்டன் சென்றார்.
 அமெரிக்காவில் வசித்து வந்த அவர், அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
 இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.
 தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும், கருப்பு நிற காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி கூறி வந்தது. துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகளிடம் இருப்பததாக தகவல்கள் தெரிவித்தன.
 அங்கு ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆடியோவில், சவூதியிலிருந்து வந்திருந்த ஆட்கள் கஷோகியிடம் விசாரணை நடத்தும் உரையாடல்களும், அவரை அடித்துத் துன்புறுத்தும் சப்தமும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 இந்த ஆதாரங்களை வெளியிட்டால், சவூதி தூதரகத்தில் துருக்கி வேவு பார்த்து வந்த விவகாரம் சர்ச்சையாகி விடும் என்பதால் அவற்றை வெளியிடுவதற்கு துருக்கி தயக்கம் காட்டி வருகிறது என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
 எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை சவூதி அரேபியா கடுமையாக மறுத்து வந்தது.
 இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் பதற்றம் அதிகரித்தது.
 இந்த நிலையில், சவூதி அரேபியாவிலும், துருக்கியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, செய்தியாளர் ஜமால் கஷோகி மாயமான விவகாரம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் உண்மையை வெளியிடும்படி சவூதி அரேபியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது.
 இந்தச் சூழலில்தான், கஷோகி மாயமான 18 நாள்களுக்குப் பிறகு தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.

செய்தியாளர் கஷோகி மாயமானது குறித்து சவூதி அரேபியா அளித்துள்ள விளக்கம் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. சம்பவத்துக்குக் காரணமாவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள சவூதி அரசை பாராட்டுகிறேன்.
 - டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர்
 சவூதியிலிருந்து அனுப்பட்ட 15 பேருடன் கஷோகி தன்னந்தனியாக கைகலப்பில் ஈடுபட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. இந்த விவகாரத்தில் சவூதி அரேபியா மீது டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடாளுமன்றம் அந்த வேலையைச் செய்யும்.
 - லிண்ட்úஸ கிரஹாம்,
 அமெரிக்க ஆளுங்கட்சி எம்.பி.
 துருக்கியிலுள்ள சவூதி தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டது, மிகவும் கொடூரமான சம்பவம் ஆகும். இதற்குக் காரணமானவர்களை இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பாக்கி அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.
 -ஜெரெமி ஹன்ட்,
 பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர்
 செய்தியாளர் கஷோகியின் மரணம் குறித்து முழு உண்மைகளும் உடனுக்குடன் வெளியிடப்பட வேண்டும். அதற்காக, மிக தீவிரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 - மார்க் ருட்,
 நெதர்லாந்து பிரதமர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com