பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார்: துருக்கி அதிபர் எர்டோகான்  குற்றச்சாட்டு 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று துருக்கி அதிபர் எர்டோகான் குற்றம் சாட்டியுள்ளார்.  
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார்: துருக்கி அதிபர் எர்டோகான்  குற்றச்சாட்டு 

இஸ்தான்புல்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று துருக்கி அதிபர் எர்டோகான் குற்றம் சாட்டியுள்ளார்.  

சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். மேலும், அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் அவர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதன் பிறகு அவரைக் காணவில்லை.

தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும், கருப்பு நிற காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி கூறி வந்தது. துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான விடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக மறுத்து வந்த சவூதி அரேபியா, தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டதை 18 நாள்களுக்குப் பிறகு ஒப்புக் கொண்டது. தூதரகம் வந்த கஷோகிக்கும், அங்கிருந்த சிலருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில் கஷோகி உயிரிழந்ததாகவும் சவூதி அரேபியா கூறியது.

கஷோகியின் மரணத்திற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.   

இந்நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று துருக்கி அதிபர் எர்டோகான் குற்றம் சாட்டியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி திட்டமிட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  பல நாட்கள் தெளிவாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள படுகொலை சம்பவம் இது. தூதரகத்தில் அவர் சித்ரவதை செய்யப்பட்டு பிறகு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.     

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com