கலீதா ஜியா உடல் நிலை பாதிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு (73) உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு பரிசோதனை நடத்தியது.
கலீதா ஜியா உடல் நிலை பாதிப்பு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு (73) உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு பரிசோதனை நடத்தியது.
 இதுகுறித்து ஊடகத் தகவல்கள் தெரிவிப்பதாவது: ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பழைய டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை சுமார் 20-30 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன் பிறகு, அவருக்கு தேவையான மருந்துகளை உடனடியாக ஏற்பாடு செய்து தரும்படி சிறை நிர்வாகத்தை மருத்துவர் குழு கேட்டுக் கொண்டது என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 "ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.10 கோடி டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
 கலிதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் கலீதா ஜியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் கலிதா ஜியா சக்கர நாற்காலியில்தான் ஆஜரானார். அப்போது அவர் நீதிபதிகளிடம், தனது கை மற்றும் கால் உணர்வற்று போய்விட்டதாக தெரிவித்தார்.
 ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்து விட்டாலும் அவர் மீது இன்னும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com