பயங்கரவாதத்தை ஒடுக்க சா்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம்: வெங்கய்ய நாயுடு

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சா்வதேச அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.
பயங்கரவாதத்தை ஒடுக்க சா்வதேச அளவில் கருத்தொற்றுமை அவசியம்: வெங்கய்ய நாயுடு

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு சா்வதேச அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக, மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், செவ்வாய்கிழமை ருமேனியா சென்றாா்.

தலைநகா் புக்காரெஸ்டில், ருமேனிய அதிபா் கிலாஸ் வொ்னா் லோஹன்னிஸை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும், சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனா். 

அதைத் தொடா்ந்து, வெங்கய்ய நாயுடு, கிலாஸ் லோஹன்னிஸ் ஆகியோா் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அதில், வா்த்தகம், சிறு, குறு தொழில்கள், மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ராணுவம், வேளாண்மை, விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு தரப்பு உறறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடா்பான ஆய்வுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ருமேனியாவின் போலஸ்தி பெட்ரோலிய பல்கலைக்கழகம், குஜராத்தில் உள்ள பண்டித தீனதாயள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சந்திப்புக்குப் பிறகு வெங்கய்ய நாயுடு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

70 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தியா, ருமேனியா இடையேயான உறவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிரியாக உருவெடுத்துள்ளது. அது, எந்தவொரு இனத்துக்கும் சொந்தமானதல்ல. எந்த மதத்தையும் சாா்ந்தது கிடையாது. பயங்கரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். அப்படிச் செய்தால்தான், எதிா்கால வளா்ச்சியை நோக்கி இந்த உலகம் அமைதியாக முன்னோக்கிச் செல்ல முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com