வட, தென் கொரியா இடையே போர் நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் 

வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. 
வட, தென் கொரியா இடையே போர் நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் 

வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.  சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் ஒருவர் வட கொரியா செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

3-ஆவது கொரிய மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் வட கொரிய தலைநகர் பியாங்கியோங் சென்றார். அவரை, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆளும் மக்கள் கட்சி அலுவலகத் தலைமையகத்துக்குச் சென்றனர். அப்போது,

கொரிய தீபகற்பத்தில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும் முக்கிய கடமை உள்ளது. தற்போது நடைபெறும் 3-ஆவது கொரிய மாநாட்டில் இரு கொரிய நாட்டு மக்களுக்கும் பரிசளிக்கும் வகையிலான நல்ல தீர்வுகள் கிடைக்கும். கொரிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் ஏற்படுதவற்கான வழி திறக்கப்பட்டுள்ளது என இரு நாட்டு அதிபர்களும் தெரிவித்தனர்.

இந்நிலையில், கிம் ஜோங்-உனுக்கும், மூன் ஜே-இனுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை புதன்கிழமை (செப். 19) நடைபெற்றது. அதில், வருகிற 2032 ஒலிம்பிக் போட்டிகளை இருநாடுகளும் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த கொரிய தீபகற்பத்தை உருவாக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மகளிர் ஐஸ் ஹாக்கி அணியில் இருநாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் இடம்பெறும் விதமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

போர் இல்லாத புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக தென் கொரிய அதிபர் தெரிவித்தார். மேலும் இருநாடுகளும் அமைதியை விரும்புவதாகவும் கூறினார். கொரிய தீபகற்பத்தில் ராணுவ அச்சுறுத்தல்களை போக்கும் விதமாக புதிய கூட்டு ராணுவத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் வடகொரியாவில் உள்ள அணு உற்பத்தி மையங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் அணு ஆயுதங்களை ஒழிக்கவும் திட்டமிடப்பட்டது. இருநாடுகளுக்கு இடையிலான ராணுவ நடவடிக்கைகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவு தூரம் வரை இருநாடுகளும் அவர்களின் எல்லைகளுக்குள் சுமார் 20 முதல் 40 கிலோமீட்டர் வரை பறக்க போர் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. அங்குள்ள ராணுவ வீரர்களும் திரும்பப்பெறப்பட உள்ளனர். இதில் முதல்கட்டமாக எல்லையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை இம்முறை சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு பிறகு முழுமையாக நீக்க திட்டமிட்டுள்ளனர்.  

வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே சாலை மற்றும் ரயில் வழிப் போக்குவரத்து சேவைகள் துவங்கப்படவுள்ளன. இதன்மூலம் கொரிய, சைபீரிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை மேம்படுத்தப்படவுள்ளது. இதனால் ஐரோப்பியா மற்றும் ரஷியா இடையே சுமூகமான வர்த்தக உறவு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து இவ்விரு நாடுகளுக்கு இடையிலான 4-ஆவது சந்திப்பு குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. இம்முறை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் முதல்முறையாக தென் கொரியா செல்ல உள்ளார். இம்மாநாடு தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெறவுள்ளது. வெகு விரைவில் இச்சந்திப்பு நடைபெறும் என இருநாடுகளின் தலைவர்களும் உறுதியளித்தனர். 

கொரிய அதிபர்களின் இந்த சந்திப்பு மற்றும் முக்கிய முடிவுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:

சர்வதேச அமைப்பு முன்னிலையில் அணு ஆயுத ஒழிப்பு குறித்து வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே இதற்கிடையில் எந்தவொரு புதிய அணு ஆயுத சோதனைகளும் நடைபெறாது. அதுபோன்று 2032 ஒலிம்பிக் போட்டிகளையும் வட, தென் கொரிய நாடுகள் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார். 

வட, தென் கொரிய நாடுகளின் ஒற்றுமை காரணமாக இனி கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும். இவ்விரு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பும் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ நடவடிக்கைகள் முற்றிலும் குறைந்து நல்ல புரிந்துணர்வு ஏற்படும் என்று வட கொரியாவின் ரஷிய தூதர் அலெக்ஸாண்டர் மாட்செர்கோ கூறினார். 

மேலும் படங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com