இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: அமெரிக்கா உற்சாக வரவேற்பு 

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஐநா பொதுக்குழு கூட்டத்தின் இடையே சந்திக்க உள்ள தகவலை அமெரிக்கா உற்சாகமாக வரவேற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: அமெரிக்கா உற்சாக வரவேற்பு 

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஐநா பொதுக்குழு கூட்டத்தின் இடையே சந்திக்க உள்ள தகவலை அமெரிக்கா உற்சாகமாக வரவேற்றுள்ளது. 

பாகிஸ்தானின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களின் விளைவாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. தற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியிருந்தார். 

அதன் தொடர்ச்சியாக இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இம்மாத இறுதியில்நடைபெறவுள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தின் இடையே சந்திக்க உள்ளதாக வியாழனன்று தகவல் வெளியானது

தில்லியில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இருவரும், இம்மாத இறுதியில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐநா பொதுக்குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளனர். 

பாகிஸ்தான் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, ஐநா பொதுக்குழுவினை ஒட்டி  இரு தரப்புக்கும் வசதியான ஒரு நாளில் இந்த சந்திப்பு நடைபெறும்.

நாங்கள் தற்போது சந்திப்புக்கு சம்மதம் மட்டுமே தெரிவித்துள்ளோம். ஐநாவில் உள்ள இருநாடுகளின் நிரந்தர தூதரகங்கள் இதற்கான ஏற்பாடுகளை இணைந்து செய்யும். அதுவரை இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட உள்ளது என்பது குறித்து நாம் பொறுத்திருக்க வேண்டும், 

அதேசமயம் இதன் மூலம் இரு நாடுகளுக்கான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவதாக கருதக் கூடாது 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஐநா பொதுக்குழு கூட்டத்தின் இடையே சந்திக்க உள்ள தகவலை அமெரிக்கா உற்சாகமாக வரவேற்றுள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹெதர் நார்ட் வியாழன் அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் அதைக் கவனித்தோம்,  இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் சேர்ந்துஅமர்ந்து பேசப் போகிறார்கள் என்பது இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த செய்தியாக இருக்கும்.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையே ஆக்கப் பூர்வமாக தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைத்தது. இதன் மூலம் எதிர்காலத்தில் இரு தரப்புகளுக்கு இடையே ஒரு  நல்ல வலுவான உறவு ஏற்படுவதற்கு ஏதுவான சூழல் உருவாகும் என்று நம்பலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.          
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com