"நெல்லிற்கு மாற்றுப்பயிர் மக்காச்சோளம்'

கோடையில் நெல்லிற்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யுமாறு நீடாமங்கலம் வேளாண் அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
"நெல்லிற்கு மாற்றுப்பயிர் மக்காச்சோளம்'

கோடையில் நெல்லிற்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யுமாறு நீடாமங்கலம் வேளாண் அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வேளாண் கோட்ட உதவி இயக்குநர் ந. இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல் அறுவடைக்குப் பிறகு வாய்ப்புள்ள இடங்களில் மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். நிலத்தடிநீரை சேமிக்க தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் பயிரை தவிர்ப்பது நல்லது.

கடந்த ஆண்டு வடுவூர் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்து நல்ல மகசூல் மூலம் அதிக லாபம் அடைந்ததை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு பாராட்டினர். எனவே, இந்த ஆண்டும் மக்காச்சோளத்திற்கு மாறலாம். கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு மக்காச்சோளம் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் சந்தை வாய்ப்புகள் நன்றாகவுள்ளன.

மக்காச்சோளத்திற்கு தை பட்டம் (ஜனவரி, பிப்ரவரி) சிறந்தது. கோ-1, கோஎச் (எம்)-5, கோபிசி-1 மற்றும் தனியார் வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்தலாம். நிலத்தை நன்கு உழவு செய்து ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரம் மற்றும் சூப்பர்பாஸ்பேட் 118 கிலோ கலந்து அடியுரமாக இட வேண்டும். விதையளவு ஏக்கருக்கு 8 கிலோ. விதையை ஒரு கிலோவிற்கு சூடோமோனஸ் 10 கிராம் வீதம் கலந்து 24 மணிநேரத்திற்கு பிறகு ஓர் ஏக்கருக்கு தேவையான ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போபேக்டீரியாவை கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

பாருக்குபார் 60 செமீ. இடைவெளியும், செடிக்கு செடி 25 செமீ. இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 6 முதல் 7 செடி இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

விதைத்த 25-வது நாளில் 66 கிலோ உரத்தில் பாதியை இட்டு மண்ணால் மூட வேண்டும். மீண்டும் 45-வது நாள் 33 கிலோ யூரியா, 25 கிலோ பொட்டாஷ் உரத்தை கலந்து இடவேண்டும். பார்களுக்கு குறுக்கில் 6 மீட்டர் நீளத்தில் பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும். களையை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் அட்ரசின் 50% நனையும் தூள் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3 நாட்கள் கழித்து தெளிக்க வேண்டும். 45-வது நாளில் களைகளை எடுக்க வேண்டும்.

குழிக்கு இரண்டு விதைகள் முளைத்திருந்தால் 12-வது நாளில் குழிக்கு ஒன்று வீதம் வளர்ந்த செடியை விட்டுவிட்டு, மற்றதை பிடுங்கிவிட வேண்டும். பயிரின் தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பயிரின் வயதை கணக்கிட்டு அறுவடை செய்ய வேண்டும். மாற்றுப் பயிராக மக்காச்சோளத்தை சாகுபடி செய்து குறைந்த நீரில் நிறைந்த லாபம் எடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com