நஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி

சிக்கன முறையில் பயிர் பாதுகாப்பு மேற்கொண்டு நஞ்சில்லா உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
நஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி

பட்டுக்கோட்டை: சிக்கன முறையில் பயிர் பாதுகாப்பு மேற்கொண்டு நஞ்சில்லா உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
நம்மால் பயன்படுத்தப்படும் நவீன பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏராளம் இருந்தாலும், சின்னச்சின்ன பொறிகளை பயன்படுத்தி அதிக செலவில்லாமல் பூச்சிகளைக் கடடுப்படுத்தி பயிர் பாதுகாப்பு செய்யலாம். நிறக்கவர்ச்சிப் பொறி, ஒளிக்கவர்ச்சி பொறி, இனக்கவர்ச்சி பொறி ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பூச்சிகளை கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டையை விவசாயிகள் தாங்களே தயாரித்து பயன்படுத்தலாம். இதற்கு பிளைவுட் அட்டையில் மஞ்சள் நிற எனாமல் பெயிண்டை பூசி உலர வைத்து, அது உலர்ந்ததும் மேற்பரப்பில் வெள்ளை கிரீஸ் அல்லது சாதாரண பசையைத் தடவி மூங்கில் குச்சி உதவிக்கொண்டு செடிகளின் இலைப்பரப்புக்கு மேலே ஏக்கருக்கு 6-8 இடங்களில் வைக்க வேண்டும்.
இதன் முலம் சாறு உறிஞ்சும் வெள்ளை ஈ, அசுவினி, இலையை சுரண்டும் பூச்சி ஆகியவை மேற்பரப்பிலுள்ள பசையில் ஒட்டிக்கொள்ளும். அதிக அளவில் பூச்சிகள் ஒட்டிய பிறகு சூடான வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பூச்சிகளை அகற்றிவிட்டு, மீண்டும் அதை பயன்படுத்தலாம்.
மஞ்சள் வண்ண அட்டையை தயாரிப்பது போலவே நீல வண்ண அட்டையை தயார் செய்து ஏக்கருக்கு 10-15 பொறிகள் அமைத்து நெற் பயிரில் இலைப்பேனையும், வெள்ளை வண்ண அட்டையைப் பயன்படுத்தி நரவாய் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிகளை ஒளிக்கவர்ச்சித் தத்துவத்தில் கவரப்பட்டு தாய் பூச்சிகளை விளக்குப் பொறி முலம் கண்காணித்து கட்டுப்படுத்தலாம். பூச்சிகள் தாக்கம் அதிகமாக உள்ள வயல்களில் தரைமட்டத்திலிருந்து 5 அடி உயரத்தில் இருக்குமாறு ஏதேனும் ஒரு மூலையில் ஏக்கருக்கு 2 என்ற எண்ணிக்கையில் விளக்குப் பொறியை வைத்து மாலை
6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் பயன்படுத்த வேண்டும். கூடுதல் நேரம் பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகள் கவரப்பட்டு அழிந்து விடும் அபாயம் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பறவை அமர்வு: நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்களில் தாய்புழுக்களைக் கட்டுப்படுத்த மூங்கில் குச்சிகள் அல்லது காய்ந்த மரக்கிளையை கொண்டு ஏக்கருக்கு 5 இடங்களில் பறவை அமர்வு வைக்க வேண்டும். அதில் அமரும் பறவைகள் வயல்வெளிகளில் சுற்றித் திரிந்து பூச்சிகளை பிடித்து உண்ணத் தொடங்கி விடும்.
இனக்கவர்ச்சிப்பொறி: தற்போது இனக்கவர்ச்சிப் பொறிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 30 நாள்களுக்கு 1 முறை பொறியில் உள்ள கவர்ச்சிப் பொறியை மாற்ற வேண்டும். இந்த கவர்ச்சிப் பொறியில் ஆண் அந்துப்பூச்சிக் கவரப்படுவதால் இனப்பெருக்கம் நடைபெறாமல் பெண் அந்து பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்.
இவ்வாறு எளிய முறையில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டால், நஞ்சில்லா உணவுப் பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்ய முடியும் என பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com