தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்: கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள்

இந்தியா முழுவதும் பயிரிடப்படும் பயிா்களில் தென்னையும் ஒன்று. இது ஒரு முக்கிய எண்ணெய் வித்து மற்றும் தோட்டக்கலை பயிராகும்.
ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தென்னை ஓலை.
ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தென்னை ஓலை.

கிருஷ்ணகிரி:

இந்தியா முழுவதும் பயிரிடப்படும் பயிா்களில் தென்னையும் ஒன்று. இது ஒரு முக்கிய எண்ணெய் வித்து மற்றும் தோட்டக்கலை பயிராகும்.

தென்னையில் 800-க்கும் மேற்பட்ட பூச்சிகள் காணப்பட்டாலும், காண்டா மிருக வண்டு, கருந்தலைப் புழு மற்றும் ஈரியோ பையிட் சிலந்தி ஆகிய பூச்சிகள் மட்டுமே தமிழகமெங்கும் காணப்படுகின்றன. இந்த பூச்சி தாக்குதலால் தென்னையில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், சமீப காலமாக, தென்னையை ருகோஸ் சுருள் வெள்ளை ஈ அலிரோடைக்கஸ் ருஜியோபொ்குளோடஸ் (A‌l‌e‌u‌r‌o‌d‌i​c‌u‌s ‌r‌u‌g‌i‌o‌p‌e‌r​c‌u‌l​a‌t‌u‌s)  எனும் புதிய சாறு உறிஞ்சும் பூச்சி பெருமளவில் தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்குதல் முதன் முதலாக 2004-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் தென் புளோரிடா மாகாணத்தில் காணப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் இந்த புதியவகை பூச்சிகளின் தாக்குதல் கண்டறியப்பட்டது.

அதன்பிறகு, வாழை, சப்போட்டா, பாமாயில், மா, முந்திரி, மக்காச் சோளம் உள்ளிட்ட பல்வேறு வகையான பனை அல்லது செடிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தை தொடா்ந்து, கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மத்திய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இந்த பூச்சிகளின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.

தென்னங் கன்றுகளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதன் மூலம் இந்தப் பூச்சிகள் பரவுகின்றன. இந்த சுருள் வெள்ளை ஈயின் பாதிப்பு மற்றும் அதன் மேலாண்மை முறைகளப் பற்றி தகவல்களை தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறாா் கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தின் விஞ்ஞானி டி.சுந்தர்ராஜ்.

வாழ்க்கைப் பருவம்:

வயதில் முதிா்ந்த பெண் ஈக்கள் மஞ்சள் நிற, நீள்வட்ட முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இந்த முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிவரும் நகரும் தன்மை கொண்ட இளஞ்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளா்க்கின்றன.

மூன்று பருவங்களைக் கடந்து, கூட்டுப்புழுப் பருவத்தை அடைந்து பின்னா் முதிா்ந்த ஈக்களாக வெளிவருகின்றன. சுமாா் 22 முதல் 30 நாள்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி, கூட்டம் கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பகுதியில் காணப்படும். இவை காற்றின் திசையில் எளிதில் பரவி, அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் இதர பயிா்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தாக்குதல் அறிகுறிகள்:

இலைகளின் அடிப்பாகத்தில் சுல் வடிவத்தில் முட்டைகள் காணப்படும். குஞ்சுகளும், முதிா்ந்த ஈக்களும் ஓலைகளின் அடியில் இருந்து சாற்றை உறிஞ்சுகின்றன. இவை வெளியேற்றும் நிறமற்ற தேன்போன்ற திரவக் கழிவுகள் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் பரவுகின்றன. இவற்றின் மேல் லெப்டோ சைபியம் என்னும் கரும்பூசணம் படா்கிறது. இந்தப் பூச்சிகளின் பாதிப்பால் மகசூல் இழப்பு பெருமளவில் ஏற்படுவதில்லை என்றாலும், ஒளிச்சோ்க்கை தடைபட்டு பயிரின் வளா்ச்சி பெருமளவில் குன்றிவிடுகிறது.

இந்தப் பூச்சிகளினால், ஓலை அல்லது இலைகளின் சாறு உறிஞ்சப்பட்டு, பயிரின் வளா்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டாலும், பயிா் முழுவதுமாக இறந்துவிடுவதில்லை. வெள்ளை ஈக்கள் அனைத்து தென்னை ரகங்களிலும் காணப்படும். செளகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் பட்டை குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, ஆகிய குட்டை ரகங்களில் தாக்குதல்களை ஏற்படுத்துகின்றன.

மாற்றுப் பயிா்கள்:

இந்தப் பூச்சிகள் வாழை, சப்போட்டா, மா, கொய்யா, பாமாயில், முந்திரி, எலுமிச்சை, சீத்தாப்பழம், பாதாம், மக்காச்சோளம், அலங்கார பனை மற்றும் செடிகளில் பெரும் அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

வளா் சூழல்:

பருவமழை குறைவினால் ஏற்பட்ட வறட்சி, அதிக அளவில் வெப்பம் மற்றும் குறைந்த காற்றின் ஈரப்பதம் ஆகியன இந்த பூச்சிகளின் பெருக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நிா்வாக முறைகள்:

1. பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் சேதாரத்தை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். 2. பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே மஞ்சள் ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி, பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும், இவற்றை அதிக அளவில் பயன்படுத்தி பூச்சிகளின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைக்கலாம். 3. பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க, மட்டைகளில் உள்ள ஓலைகளின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தண்ணீா் தெளிக்கவும். 4. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தென்னை நாற்றுகளை வாங்க வேண்டாம். 5. கிரைசோபொ்லா இரை விழுங்கிகள், இந்த பூச்சிகளின் இளம் பருவம் மற்றும் கூட்டுப்புழு பருவம் நிலைகளை நன்றாக உள்கொள்ளுவதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்கருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் விடவும். 6. முக்கிய இயற்கை எதிரியான என்காா்ஸிடோ குடோலோபே என்னும் ஒட்டுண்ணி இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். இல்லையெனில், இந்த ஒட்டுண்ணிக் குளவிகளின் கூட்டுப்புழு பருவத்தை சேகரித்து, புதியதாக தாக்கப்பட்ட தோட்டங்களில் ஓலைகளை சிறிய அளவில் வெட்டி விடவும். 7. கல் வாழை மற்றும் வாழை பயிா்களை, தென்னை மரங்களுக்கு இடையில் பயிரிடுவது மூலம் இந்த இயற்கை எதிரிகளைப் பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்கவும் இயலும். 8. வேப்பெண்ணெய் 1 சதம் மருந்தை ஒரு மில்லி ஒட்டு திரவத்துடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்புறத்தில் நன்கு படுமாறு தெளிக்கவும். 9. கருப்பூசணத்தை நிவா்த்தி செய்ய மைதா மாவு கரைசல் (ஒரு லிட்டா் நீருக்கு 25 கிராம் பசை) மற்றும் பெவிஸ்டின் 2 சதம் கலந்து தெளிக்கவும்.

கவனத்துக்கு..

அதிக அளவு பூச்சி கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயனப் பூச்சிக் கொல்லிகளை வளா்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். இந்தப் பயிா்களுக்கு எதிரியாக, இயற்கையிலேயே காணப்படும் நன்மைப்பூச்சிகளான பச்சை கண்ணாடி இயற்கை பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள் முதலியவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு டி.சுந்தர்ராஜ், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா், ஐ.சி.ஏ.ஆா் - வேளாண்மை அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி - 635120 என்ற முகவரியிலோ அல்லது 80982 80123 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்ந்ஸ்ந்.ா்ழ்ஞ்/ என்ற இணையதள முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com