பூச்சிக் கட்டுப்பாட்டில்  தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகள்

இயற்கை வேளாண்மைக்கேற்ற பூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து
பூச்சிக் கட்டுப்பாட்டில்  தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகள்

நீடாமங்கலம்: இயற்கை வேளாண்மைக்கேற்ற பூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், மு. ராமசுப்பிரமணியன் ஆகியோர் அளித்துள்ள விளக்கம்: 
பூச்சிகளிலிருந்து பயிர்களைக் காக்க பெரும்பாலும் ரசாயன மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தானியங்களில் எஞ்சிய நஞ்சாக தங்கி விஷத்தன்மை, தீமை செய்யும் பூச்சிகளில் எதிர்ப்புத்தன்மை, பூச்சிகளின் மறு உற்பத்தித் திறன் ஆகிய சீர்கேடுகளும், நன்மை செய்யும் உயிரினங்கள் பாதிப்பக்குள்ளானதும் ஆகும். மேலும் மண்வளம் குறைபாட்டுக்கும், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்கள் உண்டானதற்கும் ரசாயன மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தியதும் ஒரு காரணமாகும். 
தாவர பூச்சிக்கொல்லிகளானது பூச்சிகளை விரட்டியடித்து அவைகள் பயிரை உண்ணவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றவையாகவும். பூச்சிகளின் வளர்ச்சியைத்  தடுக்கும் தன்மைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன.  உயிரியல் முறை பயிர் பாதுகாப்பில் பூசணம்,  பாக்டீரியா மற்றும்  வைரஸ் ஆகிய உயிரின எதிர்க் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நோய் காரணிகள், நூற்புழுக்கள் மற்றும் பூச்சிகளை சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றன. எனவே, இயற்கை வேளாண்மைக்கேற்ற வகையில் பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாவர மற்றும் உயிரியல் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் சுற்றுபுறச் சூழலுக்கு எந்த பாதிப்பும் உண்டாவதில்லை. மேலும் பூச்சிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை என்பது சிறப்பான அம்சமாகும்.
பூச்சிக் கட்டுப்பாட்டில் தாவர மற்றும் உயிரியல் கொல்லிகள்: வேம்பு தாவர பூச்சிக் கொல்லிகளில் வேம்பு மிக முக்கிய மற்றும் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. வேம்பின் இலை, விதை, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு அனைத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பண்பைக் கொண்டவை. வேப்பெண்ணெய் கரைசல் 3 சதவீதம், வேப்பம் பருப்புச்சாறு கரைசல் 5 சதவீதம், வேப்ப இலைச்சாறு கரைசல் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கரைசல் 10 சதவீதம் என்ற அளவுகளில் பயன்படுத்த வேண்டும்.
பூச்சிக் கட்டுப்பாட்டில் வேம்பின் பண்புகள்: பயிர்களின் மேல் பூச்சிகள் முட்டையிடுவதை தடுக்கும் பண்பைக் கொண்டவை. பூச்சிகள் பயிரை நெருங்கவிடாமல் விரட்டியடிக்கும் ஆற்றல் பெற்றது. பூச்சிகள் பயிரை உண்ணவிடாமல் செய்யும், அப்படியே உண்டாலும் பூச்சிகளுக்கு மாந்த நிலையை உண்டாக்கி அவற்றை பட்டினி கிடக்கச் செய்து இறக்கச் செய்துவிடும். பூச்சிகளின் முட்டைகளை அழிக்கவல்லது மற்றும் முட்டைகளிலிருந்து புழுக்கள் வெளிவருவதைத் தடுக்கும் குணங்களைப் பெற்றவை. பூச்சிகளின் வளர்ச்சியை தடுத்து ஊனத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டவை. பூச்சிக்கொல்லிகளாக செயலாற்றுபவை. வேம்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் அசடிராக்டின் என்ற வேதிப் பொருள் மட்டுமே அதிக ஆற்றல் கொண்டது. இதை ஆய்வகங்களில் தனித்துப் பிரித்து வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. அசடிராக்டின் 0.03 சதவீத கரைசலை  நெற்பயிரில் இலைப்பேன், தண்டுத் துளைப்பான், இலைமடக்குப்புழு, புகையான் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 800 மிலி என்ற அளவிலும், பருத்தியில் வெள்ளை ஈ, பச்சை காய்ப்புழுக்கள், அசுவிணி, தத்துப்பூச்சி, கொண்டைக்கடலை, துவரையில் காய்ப்புழு,  வெண்டையில்  காய்ப்புழு, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி,  கத்தரியில்  தண்டு மற்றும் காய்ப்புழு, முட்டைக்கோசுவில்  வைரமுதுகு அந்துப்பூச்சி, கொக்கி பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் லிட்டர் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் வாயிலாக தெளிக்க வேண்டும்.
அசடிராக்டின் ஒரு சதக் கரைசலை  தக்காளியில் காய்ப்புழு, கத்தரியில்  தண்டு மற்றும் காய்ப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 400  முதல் 600 மிலி என்ற அளவிலும், தேயிலையில் இலைப்பேன், சிவப்புச் சிலந்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 160  முதல் 200 மிலி என்ற அளவிலும் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்ததெளிப்பான் வாயிலாக தெளிக்க வேண்டும்.
அசடிராக்டின் 5 சதக் கரைசலை  நெற்பயிரில்  தண்டுத்துளைப்பான், இலைமடக்குப்புழு, புகையான், வெண்டையில்  காய்ப்புழு, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி,  தக்காளியில் காய்ப்புழு, வெள்ளை ஈ, தேயிலையில் கம்பளிப்பூச்சி, இலைப்பேன், சிவப்புச் சிலந்தி, இளம் சிவப்பு சிலந்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 80 மிலி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ்   0.5 டபிள்யூ.பி  கரைசலை  ஆமணக்கில் கொக்கிப் பூச்சியைக் கட்டுப்படுத்த 100 -150 கிராம் என்ற அளவிலும், கொண்டைக்கடலையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 800 கிராம் என்ற அளவிலும் தெளிக்க வேண்டும். பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ்  2.5 ஏ.எஸ் கரைசலை  கொண்டைக்கடலையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 400 முதல் 600 மிலி என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.
பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ்   5 டபிள்யூ.பி  கரைசலை  துவரையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 500 கிராம் என்ற அளவிலும், முட்டைக்கோசுவில் வைரமுதுகு அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த 200 முதல் 400 கிராம் என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.
பிவேரியா பேசியானா 1 டபிள்யூ.பி  கரைசலை  கொண்டைக்கடலையில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 1.2 கிலோ என்ற அளவிலும், வெண்டையில்  காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த1.5 முதல் 2 கிலோ என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.பிவேரியா பேசியானா 1.15 டபிள்யூ.பி  கரைசலை  நெற்பயிரில்  இலைமடக்குப்புழுக்களைக் கட்டுப்படுத்த 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலியே 1.15 டபிள்யூ.பி  கரைசலை  நெற்பயிரில்  புகையான், தென்னையில் காண்டாமிருக வண்டு, கரும்பில் வெள்ளை வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். வெர்டிசிலியம் லிகேனி 1.15 டபிள்யூ.பி  கரைசலை பருத்தியில் வெள்ளை ஈ, எலுமிச்சையில் மாவுப்பூச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
என்பிவி வைரஸ் 0.43 ஏ.எஸ் கரைசலை  வெண்டை மற்றும் தக்காளியில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 600 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும். என்பிவி வைரஸ் 2.0 ஏ.எஸ் கரைசலை  கொண்டைக்கடலை,  துவரை மற்றும் தக்காளியில் காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த 100 முதல் 250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.  உயிரியல் கொல்லி மருந்துகளை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுடன் கலந்து பயன்படுத்துதல் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com