விவசாய விளைபொருள்களின் தரத்தை உயர்த்தும் சூரிய கூடார உலர்த்தி

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை சூரிய கூடார உலர்த்தியைப் பயன்படுத்தி உலர்த்துவதன் மூலமாக சந்தைக்கு தரமிக்க பொருளைக் கொண்டு செல்வது சாத்தியமாகிறது.
விவசாய விளைபொருள்களின் தரத்தை உயர்த்தும் சூரிய கூடார உலர்த்தி

மதுரை:    விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை சூரிய கூடார உலர்த்தியைப் பயன்படுத்தி உலர்த்துவதன் மூலமாக சந்தைக்கு தரமிக்க பொருளைக் கொண்டு செல்வது சாத்தியமாகிறது.
 விவசாயிகள் சாகுபடி செய்யக் கூடிய உணவு தானியங்கள் உள்ளிட்ட விளைபொருள்களில் பிற பொருள்கள் கலப்பு இல்லாமலும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகவும் விற்பனைக்கு கொண்டு செல்வது அவசியமாகிறது. 
விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற ஏக்கம் விவசாயிகளிடையே இருந்து வரும் நிலையில், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
 தேசிய அளவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பு என்பது உணவு தானியங்களில் 6 சதவீதமாகவும், காய்கறிகள் மற்றும் பழங்களில் 18 சதவீதமாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் வேளாண் துறை மூலமாக பல்வேறு திட்டங்களாக விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  இதில் விளைபொருள்களை உலர்த்துவதற்கான சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல்துறை மூலமாக மானியம் வழங்குகிறது.
 இதுகுறித்து வேளாண் பொறியியல் துறையினர் கூறியது:
 பெரும்பாலும் விவசாயிகள்,  விளைபொருள்களை மண்தரையிலோ அல்லது சாலைகளிலோ காய வைக்கின்றனர். இதனால் விளைபொருள்களில் தரையையொட்டிய பகுதியின் நிறம் மங்கியும், மேல் பகுதியிலுள்ள நிறம் வேறு மாதிரியாகவும் மாறிவிடுகிறது. இதனால் மொத்த பொருள்களின் தரம் குறைகிறது. 
 காய வைக்கும்போது விளைபொருள்களுடன் கல், மண் மற்றும் தேவையற்ற பொருள்கள் கலந்துவிடுகின்றன. இதனால், சந்தையில் தரம் குறைந்த பொருளாகப் பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்க்க விவசாயிகள் சூரிய கூடார உலர்த்திகளைப் பயன்படுத்துவதால், விளைபொருள்களின் தரம் கூடுகிறது. சூரிய கூடார உலர்த்தியில் அதிக வெப்பம் காரணமாக குறைந்த நேரத்திலேயே உலர்ந்துவிடுகிறது. இந்த உலர்த்தியைப் பயன்படுத்தும்போது காற்று, மழை போன்றவற்றால் விளைபொருள்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை.
விவசாயிகள் 400 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரை  சூரிய கூடார உலர்த்தி அமைக்க அரசால் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தோர், பெண்களுக்கு சூரிய கூடார உலர்த்தி அமைப்பதற்கான செலவினத்தில் 60 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 50 சதவீத தொகை அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் மானியமாக  வழங்கப்படும். சூரிய கூடார உலர்த்தி அமைக்க விரும்பும் விவசாயிகள் அதற்கான விண்ணப்பத்தை தங்களது பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல்,  பட்டா நகல், அடங்கல் மற்றும் புல வரைபட நகல் ஆகிய விவரங்களுடன் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.
 மதுரையில்...: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம்,  (தொலைபேசி எண் 0452-2677990), 
உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (தொலைபேசி எண் 04552-253604) ஆகிய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com