காய்கறி, பழப் பயிரில் ஈ மேலாண்மை

பழ ஈக்கள் என்பது காய்கறி, பழங்களைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும்.  இவை உற்பத்தியை சேதப்படுத்துவது  மட்டுமின்றி,
காய்கறி, பழப் பயிரில் ஈ மேலாண்மை


பெரம்பலூர்: பழ ஈக்கள் என்பது காய்கறி, பழங்களைத் தாக்கும் முக்கியமான பூச்சியாகும்.  இவை உற்பத்தியை சேதப்படுத்துவது  மட்டுமின்றி, ஏற்றுமதி போன்ற சந்தைபடுத்துதலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காய்கறிப் பயிர், பழப் பயிர்களில் பழ ஈ தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடைவதற்கு முன் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
 இந்த பழ ஈ உலகளவில் 5,000 சிற்றினங்களாகவும்,  500 பேரினங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் 243-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், 74 பேரினங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இது பல்வேறு பயிர்களைத் தாக்குவதாலும், தட்ப வெப்ப மண்டலங்களில் வாழ்வதாலும் குறுகிய வாழ்க்கை சுழற்சி உள்ளதாலும், முட்டை இடும் திறன் அதிகமாகக் காணப்படுவதாலும், அதன் கூண்டுப் பருவம் மண்ணுக்கடியில் தென்படுவதாலும் இதைக் கட்டுப்படுத்துவது  விவசாயிகளுக்குக் கடினமாக உள்ளது. 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.ஏ. நேதாஜி மாரியப்பன் கூறியது:
பழ ஈக்கள் அனைத்தும் 5 பேரினங்களான அனஸ்டிரபா, பேக்டோசிரா, டாக்கஸ், சிராடிடிஸ், ரகோலிட்டிஸ் என்பதில் வருகின்றன. இந்த பேரினத்தில் பேக்டோசிரா மற்றும் டாக்கஸ் பேரினங்களில் வரும் பழ ஈக்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. பழ ஈ தாக்குதலால் 22 முதல் 40 சதவீத  மகசூல் இழப்பு ஏற்படுகிறது. தாக்குதல் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் 90 சதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் பேக்டோசிரா என்னும் பேரினத்தில் பேக்டோ 
சீராடார் சாலிஸ் எனும் பேக்டோசீரா ஜொனேடா மற்றும் பேக்டோ சீராகரக்டா என்னும் சிற்றினங்கள் பழ வகைகளை அதிகம் தாக்குகின்றன. மேலும், பேக்டோ சீராகுக்கர் பிட்டே என்னும் பழ ஈ  புடலை, பாகல் போன்ற கொடி வகைக் காய்கறிகளைத் தாக்குகின்றன.
மாம்பழத்தைத் தாக்கும் பழ ஈக்கள்: இந்தியாவில் மாம்பழத்தைத் தாக்கக்கூடிய பழ ஈயான பேக்டோ சீரா என்னும் பேரினத்தில் 8 வகையான சிற்றினங்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகம் காணும் பழ ஈக்களில் 3 முக்கியமானவை பேக்டோ சீராடார் சாலிஸ், பேக்டோ சீராகுக்கர் பிட்டே, பேக்டோ சீராசொனேடா. 
பேக்டோ சீராடார் சாலிஸ்:  இந்த பழ ஈயானது இந்தியா முழுவதும்  பரவியுள்ளது. இது வட இந்தியாவில் அதிக குளிர்காலத்தில் செயலற்ற நிலையில் இருந்து பின் பருவநிலை மாற்றத்தின்போது தாக்குதலைத் தொடங்கும். ஆனால், தென் இந்தியாவில் இதன் தாக்குதல் ஆண்டு முழுவதும் காணப்படும்.
தாய் பழ ஈ, தனது முட்டைகளை பழத்தின் தோலுக்கடியில் இடும். ஒரு நாளில் இது பொரித்து புழு நிலையை அடையும். இந்த புழுவானது 6 முதல் 35 நாள்கள் வாழும். பின் கூண்டு பருவநிலையை அடையும்போது மண்ணுக்கடியில் சென்றுவிடும். அங்கு, 10 முதல் 12 நாள் கூண்டு பருவத்திலிருந்து வளர்ந்து, பழ ஈயாக மாறும். ஒருநாளைக்கு பெண் பழ ஈயானது 20 முட்டைகள் இடக்கூடியது. தனது வாழ்நாளில் 900- 1, 200 முட்டைகள் வரை இடும். முட்டையில் இருந்து வெளிவரும் பழ ஈக்கள் 2 முதல் 3 வாரம் வாழ்கின்றன. தாய் பழ ஈயானது புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு பின் முதிர்ச்சியடைந்து முட்டைகளை இடுகின்றன.
பேக்டோ சீராகுக்கர் பிட்டே: இந்த இனத்திலிருந்து வரும் பழ ஈக்கள் 81 வகையான காய்கறிப் பயிரைத் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவை,  புடலை, பீர்க்கன் மற்றும் பாகற்காய்  போன்ற முக்கிய கொடிவகை காய்கறிகளை அதிகம் தாக்குகின்றன. காய்கறியில் 2 முதல் 4 மி.மீ ஆழத்தில் தாய் பழ ஈ முட்டைகளை 4 முதல் 10 எண்ணிக்கையில் வாழ்நாளில் 800 - 900 முட்டைகளை இடும். ஒன்று அல்லது 2 நாளில் பொரித்து புழு நிலையை அடைகின்றன. புழுவானது 3 பருவ நிலையை உடையது.  சராசரியாக 5 முதல் 22 நாள்களில் கூண்டு பருவமாக மாறிவிடும். கூண்டு பருவமானது காபி நிறத்தில் இருக்கும். 8 முதல் 10 நாட்களில் வளர்ந்த பழ ஈயாக மாறும்.
பேக்டோசீராசொனேடா:  இந்த பழ ஈ கொய்யா, மாம்பழம், பீச் பழங்களைத் தாக்குகிறது. பாதிக்கப்பட்ட பழத்தில் சிறிய துளைகளைக் காணலாம்.  தாய் பழ ஈ 130 முதல் 550 முட்டைகள் வரை இடும். 1-3 நாள்களில் புழுவாக மாறும். பின் 1 - 2 வாரங்களில் வளர்ச்சியடைந்து மண்ணுக்கடியில் சென்று கூண்டுப் பருவமாக மாறும்.
கட்டுப்பாடு:  பழ ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்களை 40 முதல் 60 செ.மீ. ஆழமான குழிகள் தோண்டி அதை புதைக்கலாம். கூண்டுபருவம் 5 முதல் 10 செ.மீ ஆழத்தில் இருப்பதால் ஆழ உழவு செய்வது அவசியம். பழங்களைத் தாக்கும் பழ ஈக்களை கவர்ந்து அழிப்பதற்கு பேராபிரமோன் என்று சொல்லப்படும் மெத்தில் யூஜினால் கொண்ட பொறியைப் பழ மரங்களுக்கு பேக்டோ சீரடார்சாலிஸ், பேக்டோ சீராகரக்டா, பேக்டோசீராசொனேடா மற்றும் பேக்டோ சீராடை வர்சா ஆகியவற்றைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஹெக்டருக்கு 10  பொறிகள்அமைக்கலாம்.  
குயு லியூர் எனும் மாத்திரையை பாகற்காய், பீர்க்கன், வெள்ளரி, பூசணி, சுரை போன்ற  கொடி வகை  காய்கறிப் பயிர்களைத் தாக்குகின்றன. பேக்டோ சீராகுக்கர் பிட்டே, பேக்டோ சீராடிக்ரீசா, பேக்டோசீராடவ், பேக்டோ சீரானைகு நோப்யுமராலிஸ் மற்றும் பேக்டோ சீராகாடேடா பழம் பழுப்பதற்கு முன் நாட்டுச்சர்க்கரை 10 கிராமுடன் மேலத்தையான் 50 இ.சி பூச்சிமருந்து 2 மில்லி கலந்து தெளிக்கலாம். மரத்துக்குக் கீழே மண்ணைக் குவித்தல் மற்றும் குளோர் பைரிபாஸ்ஸில் நனைத்தல் மூலம் மண்ணுக்கடியில் வாழும் கூண்டு பருவ நிலையை அழிக்கலாம். பழ ஈக்கு எதிர்ப்பு சக்தி வாய்ந்த செடிகளை வளர்க்கலாம்.  
பழத்தைத் சுற்றிலும் பேக்கிங் செய்யலாம். ஜிப்ரலிக் அமிலம் தெளிப்பதனால் எதிர்ப்பு சக்தியை செடிகளுக்கு அதிகரிக்க முடியும்.  வேப்பம்புண்ணாக்கு இடலாம். அசாடிராக்டின் என்னும் வேம்பு சார்ந்த மருந்துகள் தெளிக்கலாம். கதிர்வீச்சைப்பயன்படுத்தி ஆண் பழ ஈக்களை மலடாக மாற்றி வயலில் விடலாம். மேலத்தையான் 50 இ.சி மருந்தை லிட்டருக்கு 10 மில்லி கலந்து தெளிக்கலாம். விஷ உணவு ஏக்கருக்கு 20 வைக்கலாம். விஷ உணவு தயாரிக்க மெத்தைல் யூஜினால் 10 மாலத்தியான் இரண்டையும் சம அளவு கலந்து (1:1) ஒவ்வொரு பாலித்தீன் பைகளில் 10 மில்லி  அளவுக்கு எடுத்து நச்சுப்பொறியாகப் பயன்படுத்தலாம். 
சிட்ரானல்லா எண்ணெய், நீலகிரி மர எண்ணெய், வினிகர் (அசிட்டிக் அமிலம்) மற்றும் லாக்டிக் அமிலம் ஆகியவற்றை கவர்ச்சிப் பொருளாக வைத்து, ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
பாலித்தீன் பைகளில் 5 கிராம் கருவாடு 0.1 மி.லிடைகுளோர்வாஸ் வைத்து பைகளில் 6  துளையிட்டு பொறியாகப் பயன்படுத்தி ஹெக்டேருக்கு 5  வைத்து ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம். ஒவ்வொரு வாரமும் டைகுளோர்வாஸ் சேர்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com