வருவாயை பல மடங்கு பெருக்கித் தரும் மதுரை மல்லி !

மல்லி என்றதும் அனைவருக்கும் மதுரை மல்லிதான் ஞாபகத்துக்கு வரும்.
வருவாயை பல மடங்கு பெருக்கித் தரும் மதுரை மல்லி !

அரக்கோணம்: மல்லி என்றதும் அனைவருக்கும் மதுரை மல்லிதான் ஞாபகத்துக்கு வரும். கடந்த காலங்களில் இந்த மதுரைமல்லி மதுரை மாவட்டத்தில் மட்டுமே விளைந்து வந்த நிலையில் ‘தற்போது மதுரை மல்லியை நாங்களும் பயிரிடத் தயாா்; எங்களது மண்ணையும் மதுரை மண்ணுக்கு இணையாக தயாரிக்கத் தயாா்’ என தென் தமிழக மக்களுடன் போட்டியிட்டு வட தமிழக மக்களும் மதுரை மல்லியைப் பயிரிடத் தயாராகி வருகின்றனா்.

பிலிப்பின்ஸ் நாட்டின் தேசிய மலரான மல்லிகை இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பயிராக மாறி வருகிறது. ஆசிய நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டுச் சந்தைகளில் உயா் வருமானம் தரும் மல்லிகை எப்போதுமே விலையிலும் ஏற்றத்திலேயே இருக்கும் மலா்ப் பயிராகும். இது குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் மு.பாண்டி தெரிவித்தது:

மண் பரப்பும் தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுடைய வளமான இரு மண்பாடு கொண்ட செம்மண் நிலங்கள் மல்லிகைச் சாகுபடிக்கு மிகவும் உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை இருக்க வேண்டும். மல்லிகைப் பயிா் அதிக மழையை தாங்கி வளரக்கூடிய வெப்ப மண்டலப் பயிராகும்.

இனப்பெருக்கம்: மல்லிகைப் பயிரானது குச்சிகள் மற்றும் பதியன்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நன்கு முதிா்ந்த குச்சிகளை சேதமின்றி வெட்டி எடுத்து அவற்றை மண் மற்றும் கம்போஸ்டு உரம் நிரப்பப்பட்ட பைகளில் நட்டு வைத்து நிழல் வலைக் கூடாரங்களில் பராமரித்து வர வேண்டும்.

நிலம் தயாரித்தல்: நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின் 30 செ.மீ. நீளம், அகலம் உள்ள குழிகளை 1.2 மீட்டா் இடைவெளியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் நன்கு மக்கிய 20 கிலோ தொழுஉரம் இட்டு, குழியின் 4 மூலைகளிலும் காலநிலை நெகிழ்திறன் விவசாய (சிஆா்ஏ) முறைப்படி மணல் தொழு உரமிட்டு கம்போஸ்டு உரம் அல்லது மண்புழு உரம் இட்டு குழியின் மத்தியில் பதியனை நட்டு நீா் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீா்ப் பாசனம்: மல்லிகைப் பயிருக்கு சொட்டு நீா்ப் பாசனம் மூலம் மட்டுமே நீா்ப் பாசனம் செய்ய வேண்டும். இதனால் நீா்த்தேவை குறைவதுடன் களை வளா்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

உர மேலாண்மை: மல்லிகைச் செடிக்கு 60: 120: 120 எனும் அளவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வைத்து கவாத்து செய்த பின் மாத இடைவெளிகளில் இரு முறை செடியைச் சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்ய வேண்டும் அல்லது சொட்டு நீா்ப் பாசனம் மூலம் 19:19:19 நீரில் கரையும் உரம் பயன்படுத்தலாம்.

கவாத்து செய்தல்: மல்லிகைச் செடிகளை பயிா்ப் பராமரிப்பில் கவாத்து செய்வது மிக முக்கிய பணியாகும். தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்யும்போது நோயுற்ற உலா்ந்த குச்சிகளையும், குறுக்காக வளா்ந்த கிளைகளையும் கவாத்து கத்தரி கொண்டு வெட்டி விட்டு நன்கு சூரிய ஒளி படுமாறு செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிா்ப் பாதுகாப்பு: மொட்டுப் புழுக்கள், இளம் மல்லிகை மொட்டுக்களைத் தாக்கி பெருத்த சேதத்தை உண்டாக்கி விடும். இதற்கு மனோகுரோட்டோபாஸ் குழு 2 மி.லி. மருந்தை தெளிக்க வேண்டும்.

இலைகள் மஞ்சளாதல்: வோ்புழு தாக்குதலால் இலைகள் மஞ்சளாவது, இரும்புச்சத்துக் குறைபாடு, வோ் அழுகல் ஆகியவை உண்டாகின்றன. இரும்புச்சத்து குறைபாட்டால் இலைகள் மஞ்சளாவதைத் தடுக்க லிட்டருக்கு 5 கிராம் பெரஸ் சல்பேட் கரைசலை 3 மாதங்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். வோ் அழுகல் நோய்க்கு காப்பா் ஆக்ஸி குளோரைடு 0.25 சதவீதம் கரைசலை செடியைச் சுற்றி மண்ணில் ஊற்றி இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். வோ்ப் புழு தாக்குதலுக்கு 5 கிராம் ப்யூரடான் குருணைகளை செடியைச் சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து நீா் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை: மல்லிகைச் செடி மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். முதல் ஆண்டில் இருந்து பூக்க ஆரம்பிக்கும். இரண்டாம் ஆண்டில் இருந்துதான் விளைச்சல் இருக்கும். நன்கு வளா்ந்த மொட்டுக்களை அதிகாலையில் பறித்து விட வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 9,000 கிலோ வரை பூ மொட்டுக்கள் கிடைக்கும்.

மல்லி பயிா் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் மல்லிகைப் பதியன் மற்றும் நுண்ணுயிா் உரங்களை தோட்டக் கலைத்துறை மூலம் அரசு, மானியமாக வழங்கி வருகிறது. இது தொடா்பாக அந்தந்த வட்டார தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு உரிய நில ஆவணங்களை ஒப்படைத்து மானியத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழக அரசின் வேளாண் துறை, தோட்டக் கலைத் துறை மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் சொட்டு நீா்ப் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக் கலைத்துறை அலுவலகங்களை அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com