சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குதல்

சின்ன வெங்காயப் பயிரில் வேரழுகல் நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் தாக்குதல்

பெரம்பலூர்: சின்ன வெங்காயப் பயிரில் வேரழுகல் நோய் தாக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
தமிழகத்தில் திருநெல்வேலி, ஈரோடு, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, நாமக்கல், பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டாலும், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இதில்,  பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான தொழிலாக சின்ன வெங்காய சாகுபடி உள்ளது. தமிழகத்தின் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 23 சதவீதம் சாகுபடியாகிறது. அதன்படி, நிகழாண்டு இதுவரை 3,291 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மே, ஜூன் மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்கள் சின்ன வெங்காயம் சாகுபடிக்கு முக்கிய பருவங்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் சாகுபடி பரப்பளவு குறைந்ததால் டிசம்பரில் அறுவடை குறைந்து, வெளி மாநில வரத்தும் குறைந்ததால் கடந்த சில மாதங்களாக விலையும் அதிகரித்துள்ளது. அதேபோல, பெரிய வெங்காயத்தின் வரவு குறைந்து விலை அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. தற்போது, உழவர் சந்தைகளில் கிலோ ரூ. 44-க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ. 60 முதல் ரூ. 70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தில் வேரழுகல் நோய் காணப்படுவதால், மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலையில், வெங்காயத்தின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதையறிந்த வெளி மாவட்ட வியாபாரிகள் மலைக் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை வாங்கி வந்து கிலோ ரூ. 25-க்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த வெங்காயத்தின் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.   

இதுகுறித்து ஆலத்தூர் வட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எஸ். மணி கூறியது:
ஏக்கருக்கு 500 - 600 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும் நிலையில் ரூ. 1 லட்சம் வரை செலவாகும். மேலும், ஆள் கூலி, உரம், களையெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 1.50 லட்சம் செலவழித்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. நடவுப்பணியின் போது, போதியளவில் மழை பெய்ததால் சின்ன வெங்காயத்தில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அண்மையில் பரவலாக பெய்த தொடர் மழையால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதால் 90 சதவீத வெங்காயத்தில் தற்போது வேரழுகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
வெங்காயப் பயிர்களின் மேல்புறத்தில் நோய் தாக்குதல் காணப்பட்டால், அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். இந்நோயானது, வேர் பகுதியில் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்நோயால் மகசூல் இழப்பு ஏற்பட்டு, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்றார் அவர். 
வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது:
வேரழுகல் எனப்படும் திருகல் நோயைக் கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட பல மருந்துகளைப் பயன்படுத்தியும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்ணில் உள்ள பூஞ்சைகளால் இந்தநோய் வேகமாகப் பரவுகிறது.நோய் தாக்குதலுக்கு ஆளான செடிகளைப் பிடுங்கிவிட்டு  மருந்து   தெளிக்க வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் இதை முறையாகச் செய்யவில்லை. இந்நோயைக் கட்டுப்படுத்த புணேவில் உள்ள வெங்காயம் மற்றும் பூண்டு ஆராய்ச்சி இயக்குநரகத்திடம் தொழில்நுட்ப உதவி கேட்டுள்ளோம். மேலும், இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற  பரிந்துரையையும்  அந்த நிறுவனமும் ஏற்றுள்ளது. 
வைகாசி, மாசி பட்டங்களில் இந்நோய் தாக்குதல் இருக்காது. ஆவணி, புரட்டாசி பட்டங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மழை பெய்தால் மட்டுமே இப்பிரச்னை ஏற்படுகிறது. ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட பயிர்களில் இந்நோய் தாக்குதல் இருக்கும். இப் பிரச்னைகளைக் களைய புரட்டாசி பட்டத்தை விவசாயிகள் தவிர்த்து, மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com