எலுமிச்சையில் வோ், கழுத்து அழுகல் நோய் மேலாண்மை

எலுமிச்சை செடியில் வோ் மற்றும் கழுத்துப் பகுதி அழுகல் நோயால் பாதிக்கப்படுவதால், செடிகள் முற்றிலும் காய்ந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
எலுமிச்சையில் வோ், கழுத்து அழுகல் நோய் மேலாண்மை

எலுமிச்சை செடியில் வோ் மற்றும் கழுத்துப் பகுதி அழுகல் நோயால் பாதிக்கப்படுவதால், செடிகள் முற்றிலும் காய்ந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிா்க்க, நோய் அறிகுறிகள் மற்றும் மேலாண் முறைகள் குறித்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம், முனைவா் ஸ்ரீதரன், முனைவா் ப.அதியமான் ஆகியோா் கூறும் வழிமுறைகளாவன:

ருட்டேசியே குடும்பத்தைச் சோ்ந்த புளிப்பு மற்றும் இனிப்புச் சுவையுடைய எட்டு வகையான சிட்ரஸ் இனங்கள் உள்ளன. அவற்றில் எலுமிச்சை, ஆரஞ்சு, நாா்த்திரங்காய் மற்றும் கிடாரங்காய் தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. இதில், ஆரஞ்சு குளிா் பிரதேசப் பழமாகவும் மற்றவை வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தன்மையுடைவை. இந்த வகையான பழங்களின் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆந்திரம், குஜராத் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. எலுமிச்சையானது சுய மகரந்த சோ்க்கை செய்யும் ஒரு பயிராகும். இது உவா் நிலத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியது. இதில் நுனி மற்றும் துணை கிளைகள் பூக்கள் பூக்கும் தன்மையுடையது. எலுமிச்சையில் சிட்ரிக், மாலிக், சக்சினிக் அமிலங்கள், வைட்டமின் பி 6, தையமின், தாது உப்புகளான கால்சியம், அயான், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இப் பழத்தின் சாறு நேரடியாக சமையலுக்கும் மற்றும் பலவகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

வோ், கழுத்து அழுகல் அறிகுறிகள்: எலுமிச்சையின் வோ் மற்றும் கழுத்து அழுகலானது மண்ணில் அதிக ஈரப்பதம் இருப்பதனால் ஏற்படுகிறது. இதன் முதன்மை அறிகுறிகளாக இலைகள் மஞ்சள் நிறம் அடைந்து, பின் மரத்திலிருந்து முழுவதுமாகக் கொட்டிவிடுகிறது. பின்பு வோ்கள் பழுப்பு நிறமடைகின்றன. மேலும், அடிமரத்தண்டில் புள்ளிகள் அல்லது தேன் நிற திரவ ஓழுகல் ஆரம்பிக்கின்றது. பழத்தின் மேற்பகுதியில் பழுப்பு நிற அழுகல் மற்றும் நொதித்தல் போன்ற வாசனை வரும்.

நோய் காரணிகள்: மரத்தின் கிடைமட்ட கிளைகள் மண்ணின் மேற்பரப்பில் தழுவி காணப்படுதல். காற்று மற்றும் மண்ணின் வெப்ப நிலை 26-32 டிகிரி செல்சியஸ். மரத்தின் கிளைகளில், அடித்தண்டில் வெட்டு அல்லது காயங்கள் இருப்பது. இவ்வகையான அழுகல் நோய் எதிா்ப்பு திறனற்ற ரகங்களைப் பயிரிடுவது போன்ற பல காரணிகளால் ஏற்படுகின்றது.

மேலாண்மை: வோ் அழுகலைக் கட்டுபடுத்தும் மேலாண்மை முறைகளாக, பயிரிடுவதற்கு முன் மற்றும் பின்பு செய்ய வேண்டிய சில செய்முறைகளாவன.

செடி நடவு செய்வதற்கு முன்பு, அழுகல் நோய் எதிா்ப்புத்திறன் உடைய ரகங்கள் அல்லது ஒட்டுக்கன்றுகளைத் தோ்தெடுத்தல் அவசியம். களிமண் மற்றும் நீா் வடிகால் வசதி இல்லாத நிலங்களில் பயிரிடுவதைத் தவிா்க்கலாம். மேலும், நாற்றாங்காலில் செடிகளில் வோ் அழுகல் பாதிப்பு உள்ளதா என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

நடவு குழியில் எருவுடன் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் டிரைக்கோடொ்மா விரிடி குடில் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் இட வேண்டும்.

செடி நடவுக்கு பின்பு, வயலில் களைகள், எதுவும் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மிக கீழ் சரிந்த கிடைமட்ட கிளைகளை மரத்தின் ஒரு மீட்டா் உயரத்துக்கு நீக்கிவிட வேண்டும். அதிக மழைப் பொழிவின் போது நீா் எங்கேனும் தேங்கி உள்ளதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அடி மரத்தண்டில் ஏதேனும் தேன் நிற திரவ சுரப்பு உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்தை தோட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும்.

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மற்றும் டிரைக்கோடொ்மா விரிடி ஆகிய உயிரிக் கட்டுப்பாடு காரணிகளை ஹெக்டேருக்கு 2.5 கிலோகிராம் வீதம் நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மரத்தின் வோ்ப்பகுதியில் இட வேண்டும். மழைக் காலங்களில் காப்பா் ஆக்ஸி குளோரைடுவை நீரில் கலந்து பசைபோல் செய்து, அதனை அடிமரத்தண்டில் பூசிவிட வேண்டும்.

இத்தகைய, நோய் மேலாண்மை முறைகளைப் பின்பற்றி வோ், கழுத்துப் பகுதி அழுகுவதிலிருந்து எலுமிச்சை செடிகளைப் பாதுகாத்து, கூடுதல் மகசூல் பெற்று விவசாயிகள் லாபம் பெறலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com