கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடி

கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் விதை தரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப்பரிசோதனை
கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடி


கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் விதை தரங்கள் குறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப்பரிசோதனை அலுவலர் து.சிவவீரபாண்டியன், திருவாரூர்  விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன் மற்றும் வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி  ஆகியோர் தெரிவித்திருப்பது: 
பொதுவாக கார்த்திகை பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்துக்குள் விதைப்பு செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அளிக்கிறது. இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யும்போது போதிய மழை, சரியான தட்பவெப்பநிலை சாதகமாக இருப்பதால், அதிக மகசூல் பெறப்படுகிறது.
மணிலா உற்பத்தியால் அதிக மகசூலை பெற அந்த பகுதிகளுக்கு ஏற்ற குறைந்த வயதுடைய உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து அந்த ரகங்களின் தரமான விதைகளைப் பயன்படுத்துவது முக்கியமான அடிப்படை தேவைகளில் ஒன்றாகும். 
அதிகபட்ச இனத்தூய்மையும், மண் தூசி பதர் போன்றவை நீக்கப்பட்டு அதிக புறத்தூய்மையும், பூச்சி நோய் தாக்காமலும் நல்ல முளைப்புத்திறனுடன் கூடிய வேகமான வளர்ச்சியை தரவல்ல விதைகளே தரமான விதைகள் ஆகும்.
நிலக்கடலையைப் பொருத்தவரை பயன்படுத்தப்படும் விதைகளுக்கு குறைந்தபட்சம் 70 சதவிகிதம் முளைப்புத்திறனும், 96 சதவீதம் புறத்தூய்மையும் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் விதைகளில் 4 சதவீதம் மட்டுமே கல், மண், தூசிகள் இருக்கலாம். பிற இனப்பயிர் விதைகள், பிற ரக விதைகள் ஒன்றுமே இருக்கக்கூடாது. மேலும் விதையின் அதிகப்பட்ச ஈரப்பதம் 9 சதவீதம் இருக்கவேண்டும். நிலக்கடலை சாகுபடியில் அதிக இடுபொருள் செலவாக இருப்பது விதையே. எனவே நல்லத் தரமான சான்று பெற்ற விதையைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைப்பு செய்யும்போது ஏக்கருக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 333 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையைப் பராமரித்து உயர் விளைச்சல் பெறலாம்.
ரகங்களும், குணங்களும்: கார்த்திகைப் பட்டத்தில் டி.எம்.வி.7, கோ.3, கோ.(ஜி.என்)4, வீ.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3,  ஏ.எல்.ஆர்.3, வீர்.ஆர்.(ஜிஎன்) 5, வி.ஆர்.(ஜின்-6), டி.எம்.வி.(ஜின்.13),  டிஎம்வி-(ஜின்)14,  வீஆர்ஐ-8  ஆகிய ரகங்கள் பயிரிட உகந்த ரகங்களாகும். மேலும் இந்த ரகங்களின் குணங்களை அறிந்து தேர்வு செய்து அதற்கேற்ப சாகுபடி முறைகளைப் பின்பற்றவேண்டும்.
டி.எம்.வி.7 ரகம் 105 நாள்கள் வயதுடைய வறட்சியை தாங்கி வளரக்கூடிய கொத்து வகையைச் சேர்ந்தது. கடந்த 44 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. இது டென்னஸி என்ற ரகத்தில் இருந்து தனிவழித்தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட ரகமாகும். இதன் காய்களின் பின்பகுதி ஒட்டகத்தின் முதுகு போன்று இருப்பதைக் கொண்டு இந்த ரகத்தை எளிதில் அறிந்துகொள்ளலாம். இது 74 சதம் உடைப்புத் திறனும், 49.6 சதம் எண்ணெய் சத்தும் கொண்டது. வெளிறிய சிவப்பு நிற விதைகளைக் கொண்ட இந்த இரகத்தின் 100 விதைகளின் எடை 36 கிராம் ஆகும். 10 நாள்கள் விதை உறக்கம் உள்ள இந்த ரகம் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 1400 கிலோ விளைச்சல் தரவல்லது.
அதேபோல் கோ.3 ரகம் மொட்டு கருகுதல் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. கோ.(ஜி.என்)-4 ரகம், டி.எம்.வி.(ஜி.என்).13, வீ.ஆர்.ஐ.(ஜி.என்)-5 போன்றவையும் நல்ல விளைச்சல் தரக்கூடியவை.
வீ.ஆர்.ஐ.(ஜி.என்)-6 ரகம் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. இது ஏ.எல்.ஆர்.2 மற்றும் வி.ஜி. 9513 ஆகியவற்றை இனக்கலப்பு செய்து உருவாக்கப்பட்டது.
கடலை விதை ரகங்களின் குணங்களையும், தரங்களையும் அறிந்த விவசாயிகள் கடலை விதைகளின் முளைப்புத்திறனை அதிகமாக்கவும், அவை விரைவில் முளைத்து தேவையான பயிர் எண்ணிக்கையைப் பெற விதைகளை முளைக்கட்டி விதைத்தல் முறையை கடைப்பிடிக்கலாம்.
இதற்கு ஏக்கருக்கு தேவைப்படும் விதை அளவு 55 கிலோ மற்றும் 140 கிராம் கால்சியம் குளோரைடு மற்றும் 28 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். முதலில் 140 கிராம் கால்சியம் குளோரைடை 28 லிட்டர் நீரில் கரைத்து, அந்த கரைசலில் விதையை 6 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின் ஊற வைத்த விதைகளை ஈரச்சாக்கின் மீது பரப்பி அதை மற்றொரு ஈரச்சாக்கு கொண்டு 24 மணி நேரம் மூடிவைக்கவேண்டும். 
பின் விதையில் கருமுளை வெளிவந்திருக்கும். இவ்வாறு முளைக்கண்ட விதைகளைப் பிரித்து நிழலில் உலர்த்தவேண்டும். மிக நீளமான கருமுளை வெளிவந்த விதைகளையும் இறந்த விதைகளையும் தனியே பிரித்து எடுத்துவிடவேண்டும். இவ்வாறு நல்ல தரமான முளைப்பு திறனுடைய விதைகளைத் தேர்வு செய்து விதைப்புக்கு பயன்படுத்துவது நன்மை தரும்.
மேலும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நிலக்கடலையைக் கட்டாயம் பரிசோதனை செய்த பிறகே நடவுப் பணியில் ஈடுபடவேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் கையிருப்பில் உள்ள விதை நிலக்கடலைக் காய்களில் இருந்து 500 கிராம் அளவுக்கு விதைமாதிரி எடுத்து விதைப்பரிசோதனை நிலையத்தை அணுகி பயன் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com