அதிக விளைச்சலுக்கு விதை பரிசோதனை அவசியம்

அதிக விளைச்சலுக்கும், விதை சேமிப்புக்கும் விதை பரிசோதனை செய்வது அவசியமாகும்.
அதிக விளைச்சலுக்கு விதை பரிசோதனை அவசியம்


திருவாரூர்: அதிக விளைச்சலுக்கும், விதை சேமிப்புக்கும் விதை பரிசோதனை செய்வது அவசியமாகும்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்டத்துக்கான தஞ்சை சரக விதைப் பரிசோதனை அலுவலர் து.சிவவீரபாண்டியன், திருவாரூர்  விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் ச.கண்ணன், வேளாண்மை அலுவலர் க.புவனேஸ்வரி  ஆகியோர் தெரிவித்திருப்பது: 
வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் விதைகளின் பங்கு இன்றியமையாததாகிறது. வித்தே  விளைவின் ஆதாரம், விதை பாதி, வேலை பாதி, சொத்தைப் போல் வித்தைப் பேண வேண்டும் ஆகிய பழமொழிகள் தரமான விதை உற்பத்தி மற்றும் விதை சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன. விதைகள் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம். விதைகள் நல்ல தரத்துடன் இருந்தால் மட்டுமே, பயிர்கள் மற்ற அனைத்து இடுபொருட்களையும் ஏற்றுக்கொண்டு நல்ல முறையில் வளர்ந்து அதிகரித்த விளைச்சலை அளிக்கும். நல்ல தரமான விதைகள் என்பது இனத்தூய்மை, புறத்தூய்மை, முளைப்புத்திறன், வீரியம் மற்றும் விதைநலம் போன்ற குணாதிசயங்களில் மேம்பட்டு இருக்க வேண்டும். நல்ல தரமான விதைகளின் பயன்பாடு மட்டுமே உற்பத்தியில் 15 சதவீதம் அதிகரித்த விளைச்சலுக்கு வழிவகுக்கிறது.
தமிழகத்தில் விதை உற்பத்திக்காக தானியங்கள் ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படுவதில்லை. எனவே நம் விதை தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, அறுவடைக் காலத்தில் விதைகளை தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்து சேமித்து வைத்து கொள்ள வேண்டும். விதை சேமிப்பு என்பது பாரம்பரியமாக  நம் முன்னோர்கள் காலத்திலிருந்து கையாண்டு வரக்கூடிய  பழக்கமாகும்.
உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை உடனே விற்பனை செய்ய இயலாது. ஆதலால், விதைகளை அதன் விதைப்பு காலம் வரும் வரை விதை உற்பத்தியாளர்கள், விதை விநியோகம் செய்பவர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதைகளை சேமித்து வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
விதைகளை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ, அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது. சேமிப்பின் போது விதைகள் அதிக காலம் சேமித்து வைக்கப்படுவதால் சேதமடைகின்றன. இது காலநிலை, ஈரப்பதம் மற்றும் வெளிப்புற உயர்க் காரணிகளான பூச்சிகள் மற்றும் நோய்க் கிருமிகளால் அதிகமாகிறது. விதையினுள் உள்ள நோய்க் கிருமிகள் மற்றும் சேமிப்பு பூச்சிகள் மற்றும் எலிகள் அவற்றின் உணவுக்காக விதைகளைத் தாக்குகின்றன.
ஈரப்பதம் முக்கியம் : விதைகளை சேமிக்கும் போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். விதையில் ஈரப்பதம் இருப்பதை பொருத்தே விதைக்குவியலின் ஆயுள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு விதையின் ஈரப்பதம் அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்க கூடாது. சரியான ஈரப்பத நிலையில் உள்ள விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சான தாக்குதலின்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும். மேலும் விதைகளின் ஈரப்பதத்தை சேமிப்புக் காலம் முழுவதும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் ஈரப்பத சதவீதம் மாறுபடும். நெல் அதிகபட்ச ஈரப்பதம் 13 சதவீதம், மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகிற்கு அதிகபட்ச ஈரப்பதம் 12 சதவீதம் உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை, சூரியகாந்தி, கொண்டைக்கடலை, எள், கொத்தவரை, முருங்கை பயிர்களின் விதைக்கு 9 சதவீதமும் இருக்க வேண்டும். பருத்தி, வெண்டை, தக்காளி பயிர்களின் விதைகளுக்கு 10 சதவீத ஈரப்பதமும், கொடிவகை காய்கறி பயிர்களான பாகல், புடலை, பீர்க்கன், பூசணி, தர்ப்பூசணி, பரங்கி விதைகளுக்கு 7 சதவீத ஈரப்பதமும் இருக்க வேண்டும். மேலும் கத்தரி, மிளகாய், தக்காளி, வெங்காயம், கேரட் மற்றும் கீரை வகை விதைகளுக்கு 8 சதவீதமும் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
பூச்சிகள்:  விதை சேமிப்பின் மிகப்பெரும் எதிரிகளாக கருதப்படுபவை புழுக்கள் மற்றும் பூச்சிகளாகும். இவற்றால் ஏற்படும் விதை இழப்பு 2.55 சதவீதமாகும். பூச்சிகள் விதைகளைத் துளைத்து அவற்றின் சத்துப் பகுதிகளை உண்பதோடு மட்டுமின்றி தங்களுடைய கழிவுப்பொருட்களால், விதைகளை அசுத்தப்படுத்தி அவற்றை விதைப்பு செய்வதற்கே தகுதியற்றவையாக்கி விடுகின்றன.     விதைகளில் பூச்சிகளின் கழிவுப் பொருட்கள் சேர்வதால் ஈரப்பதம் அதிகரிக்கும். ஈரப்பதம் அதிகமுள்ள விதைகளில் பூஞ்சானம் தோன்றி விதைகளைக் கெட்டியாக்கி, துர்நாற்றம் வீசச் செய்வதோடு விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை இழக்கச் செய்கின்றன.     பூச்சிகள் அறுவடையின்போது வயலில் இருந்து சேமிப்புக் கிடங்குக்கு வருகின்றன. விதைகளின் ஈரப்பதத்தின் மூலமாக பூசனங்கள் வருகின்றன. பூச்சிகளும், பூசனங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எனவே விதைகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது அவசியமாகிறது. 
விதைகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் முறைகள்... விதைகளை சேமிக்கும் கதிர்கள் மற்றும் கிடங்குகளை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். உடைந்த விதைகள், குப்பைகள், தூசு போன்றவற்றை அகற்றிவிட வேண்டும். விதைகளை குறிப்பாக நெல் விதைகளை சூரிய ஒளியில் உலர்த்துவதில்தான் நுணுக்கம் உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் களத்தில் கொட்டி மூன்று நாட்களுக்கு உலர்த்த வேண்டும். நெல்லை கால்களால் தள்ளியபடி உலர்த்தும்போது, சலசலவென்று சத்தம் கேட்கும். கைகளில் அள்ளி வைத்து திருகி பார்த்தால் எளிதாக தோல் உரியும். அரிசியை வாயில் வைத்து கடித்தால் கடுக்கென்று சத்தம் கேட்கும். இந்த அறிகுறிகளை வைத்தே நெல் 12 சதவீத ஈரப்பதத்துடன் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். 
   விதை மூட்டைகளை தரையில் அடுக்காமல் டன்னேஜ் கட்டைகள் மீது அடுக்க வேண்டும். மூட்டைகளை சுவரை ஒட்டி வைக்காமல் தனித்தனியாக, அடுக்காக, நல்ல இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைக்க வேண்டும். விதை சேமிப்புக்கு பயன்படுத்தப்படும் சாக்குப்பைகள் புதியதாக இருக்க வேண்டும். மாலத்தியான் 0.1 சதவீதக் கரைசலை மூட்டை நனையாமல் தானியங்கள் மேல்படாமல் அளவாக தெளித்து வரவேண்டும். பூச்சிகள் விதை மூட்டையில் காணப்பட்டால் அவற்றை அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையிட்டு (ஒரு டன் விதை மூட்டைகளுக்கு மூன்று மாத்திரை வீதம்) பாலித்தீன் உறைகளால் மூடி 5 நாட்களுக்கு நச்சுப் புகையிட்டு வைப்பதன் மூலம் அழிக்கலாம்.     மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விதை மாதிரிகளை எடுத்து விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைகளின் ஈரப்பதம் மற்றும் விதை நலன் பரிசோதனை செய்து, அதன் முடிவுகளின்படி சில பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். 
தற்போது குறுவை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட ரகங்களான ஆடுதுறை-43, ஆடுதுறை-45, ஏ.எஸ்.டி-16, கோ-51, ஆடுதுறை-53 ஆகியவற்றில் விவசாயிகள் விதைகளுக்காக காய வைத்து சேமித்து வைத்து கொள்வர். அவ்வாறு சேமித்து வைத்துள்ள விதைகளில் ஈரப்பதம், புறத்தூய்மை பரிசோதனை, முளைப்புத்திறன் மற்றும் விதை நலன் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு விதை சேமிப்பு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம் ஆகும்.    விதையின் ஆரோக்கியம் தான் விவசாயத்திற்கு அடிப்படை. சிறு விதையே விருட்சம் ஆகிறது. அத்தகைய விதைகளை தரமாக பராமரித்து சேமித்து வைக்க வேண்டும். 
திருவாரூர் விதைப் பரிசோதனை நிலையத்தில் டிஜிட்டல் ஈரப்பதம் சோதனை செய்யும் கருவி கொண்டு விதையின் ஈரப்பதம் துல்லியமாக ஆய்வு செய்து முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தியாளர்கள், விதை விநியோகம் செய்வோர், விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதையின் ஈரப்பதம் மற்றும் விதை நலன் குறித்த பரிசோதனை மேற்கொள்ள ரூ.30 கட்டணத்துடன் விதை பரிசோதனை நிலையம், பெரிய மில் தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com