நெல்பயிருக்கு துத்தநாக நுண்ணூட்டச் சத்து இடுவதால் அதிக மகசூல் பெறலாம்

நெல் பயிரில் அதிக மகசூல் பெற துத்தநாக நுண்ணூட்டச் சத்து இட வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்பயிருக்கு துத்தநாக நுண்ணூட்டச் சத்து இடுவதால் அதிக மகசூல் பெறலாம்


அரியலூர்: நெல் பயிரில் அதிக மகசூல் பெற துத்தநாக நுண்ணூட்டச் சத்து இட வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தது: 
நெல்பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. மேலும், ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நுண்ணூட்டச் சத்துக்களை அதிலும் குறிப்பாக துத்தநாக சத்தினை (சிங் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெல்பயிர் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நெல்பயிரில் பச்சையம் உருவாவதில் தொடங்கி பல்வேறு உயிர்வேதி விளைவுகளுக்கு துத்தநாகம் உதவிபுரிகிறது. துத்தநாகச்சத்து அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
துத்தநாகச் சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான காரணிகள்: அதிக கார அமில மண்ணில் (பிஎச் 7-க்கு மேல்), தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிகளவு பை கார்பனேட் உப்பின் அளவு இருத்தல், அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாகத் தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடர்ந்து நெல்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணில் உள்ள துத்தநாகச் சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை, மேலும், களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாகச் சத்தானது பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
பயிர்களில் துத்தநாக சத்தின் செயல்பாடுகள்: துத்தநாகம் பயிர்களின் செல்களிலுள்ள பல்வேறு நொதிகளிலும், உயிரணுக்களில் உள்ள ரைபோ நியூக்கிளிக் அமிலத் தயாரிப்பிலும் பங்கு பெறுகின்றன. செல்களில் உள்ள சைட்டோபிளாசத்தின் ரைபோசு என்ற சர்க்கரைப் பொருளின் அளவைக் கட்டுப்படுத்த தேவைப்படுகிறது. பயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கும், பயிர்களில் நடைபெறும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கும் துத்தநாகம் தேவைப்படுகிறது. 
துத்தநாகச் சத்து பற்றாகுறையால் உண்டாகும் அறிகுறிகள்: நெல்பயிரில் துத்தநாகக் குறைபாடுகளை நடவு வயலில் நான்கு வாரத்துக்குள்  காண முடியும்.
இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்து விடும். பயிர்கள் சீராக வளராமல் திட்டுத் திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும்.
துத்தநாகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்: வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெல்பயிரில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். எனவே, காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வயலில் எப்போதும் தண்ணீர் தேங்காத வகையில், போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரம் இடுதல் வேண்டும். பசுந்தாள் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை அதிகளவில் வயலுக்கு இடவேண்டும். நெல்பயிரையே தொடர்ந்து சாகுபடி செய்யாமல் பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள் போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com