நிலக்கடலை சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை (மணிலா), எள், ஆமணக்கு, சூரியகாந்தி முக்கிய பயிர்களாக விளங்குகின்றன.
நிலக்கடலை சாகுபடி: ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

பெரம்பலூர்: தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை (மணிலா), எள், ஆமணக்கு, சூரியகாந்தி முக்கிய பயிர்களாக விளங்குகின்றன.

எண்ணெய் வித்துப் பயிர்கள் தமிழகத்தில் சுமார் 5 லட்சம் ஹெக்டேரில் மானாவாரியாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. குறைந்த இடுபொருள் செலவு, வளம் குறைந்த நிலப்பகுதி, பெரும்பாலும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுவதால் எண்ணெய் வித்துப் பயிர்களின் விளைச்சல் மிகக் குறைவாகவே காணப்படும். 
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை ஒரு முக்கிய பயிராகும். இப்பயிர் சுமார் 4.13 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 8.5 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைச்சல் ஏக்கருக்கு 654 கிலோவாகும். எண்ணெய் வித்து உற்பத்தியில், கடந்த சில ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்தையில் நிலவும் விற்பனை வாய்ப்பைப் பயன்படுத்தி நிலக்கடலை உற்பத்தியைப் பெருக்கினால் உழவர்கள் அதிக லாபம் பெற முடியும். 

இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் எம். புனிதவதி கூறியது:

கோடை உழவு: மார்ச் மாதம் கோடை உழவை ஆரம்பிப்பதே உரிய காலமாகும். நிலக்கடலைக்குப் பொதுவாக 500 முதல் 600 மி.மீ. வரையிலான மழைப்பொழிவு தேவைப்படும்.  தமிழ்நாட்டில், மானாவாரியில் பயிரிட சித்திரை (ஏப்ரல் - மே), முன் ஆடி (ஜூன்- ஜூலை), பின் ஆடி (ஜூலை- ஆகஸ்ட்) பட்டங்கள் மிகவும் உகந்தவை.   

நிலத்தை பண்படுத்துதல்:

மணல்பாங்கான வண்டல், செம்மண், கரு வண்டல் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை. சட்டிக் கலப்பையைப் பயன்படுத்தி உழுதபின் 3 - 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பையைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழ வேண்டும். பின்னர், ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை இட வேண்டும். 

ரகங்கள்: ஆடிப் பருவத்தில் மானாவாரியில் டி.என்.ஏ.யு. நிலக்கடலை கோ -6 ரகம் சேலம், நாமக்கல் பகுதிகளிலும், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ. (ஜி.என்.) 6, டி.எம்.வி. (ஜி.என்) 13, கோ (ஜி.என்.) 4 மற்றும் ஏ.எல்.ஆர். 3 ரகங்களும் பயிரிட ஏற்ற ரகங்களாகும். 

விதைகளும், விதைப்பும்

உழவர்களில் பெரும்பாலானோர் முந்தைய அறுவடையின்போது சேமித்து வைத்திருக்கும் விதைகளையோ அல்லது அரைவை ஆலைகளிலிருந்து விதைகளை வாங்கியோ பயன்படுத்துகின்றனர். எஞ்சிய 14 சதவீதத்தினர் டி.எம்.வி.7,  டி.எம்.வி.13, வி.ஆர்.ஐ. 6 போன்ற நிலக்கடலை ரகங்களை வேளாண்மைத் துறை, தனியார் விற்பனை நிலையங்களிலிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர். 
பெருவாரியான உழவர்கள் சால் விடுதல் எனப்படும் கலப்பைக்குப் பின் விதைக்கும் முறையைப் பின்பற்றுகின்றனர். இம்முறையில் குறைந்த வேலையாள்களைக் கொண்டு குறைந்த நேரத்தில் விதைக்க முடியும். 
பாத்தி அமைத்தல்: பாத்தியை நீர் அளவு, சரிவு, மண்ணின் வகையைப் பொருத்து 10 சதுர மீட்டர் முதல் 20 சதுர மீட்டர் வரை அமைக்க வேண்டும். டிராக்டரைப் பயன்படுத்தி பாத்தி அமைப்பானைப் பயன்படுத்தலாம். 
விதை அளவு:ஏக்கருக்கு 50 கிலோ விதையைப் பயன்படுத்த வேண்டும். பெரிய விதை கொண்ட ரகங்களுக்கு 15 விழுக்காடு கூடுதலாகப் பயன்படுத்தவும். 
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை விதைக்கும் முன் கலக்கவும். இது, உயிர் உரங்களுடன் கலக்க ஏதுவானது. இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைப் பூஞ்சாணக் கொல்லிகளுடன் கலக்கக் கூடாது. விதைகளை திரவம் அல்லது மாங்கோசெப்புடன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலோ அல்லது கார்பாக்சின், கார்பென்டாசிமுடன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவிலோ கலக்கவும். ரைசோபியம் (600 கிராம்), அசோஸ்பைரில்லம் (600 கிராம்), பாஸ்போபாக்டீரியா (600 கிராம்) இவைகளை ஒரு ஹெக்டேருக்குத் தேவையான விதைகளுடன் ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்யப்படாவிட்டால், 2 கிராம் ரைசோபியத்துடன் 25 கிலோ எரு, 25 கிலோ மணலுடன் கலந்து விதைக்கவும். 
இடைவெளி: இறவையில் வரிசைக்கு வரிசை 30 செ.மீட்டரும், செடிக்குச் செடி 10 செ.மீட்டரும்  4 செ.மீ. ஆழத்திலும் விதைக்கவும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற  எண்ணிக்கையில் இருக்க வேண்டும். 
நுண்ணூட்டமிடுதல்: வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்டச்சத்துக் கலவை ஏக்கருக்கு 5 கிலோவுடன், உலர்ந்த மணலைப் பயன்படுத்தி 20 கிலோவாக, விதை விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும். இதை இடும்போது மண்ணில் ஈரப்பதம் இருக்க வேண்டும். 
களைக் கட்டுப்பாடு: உழவர்களில் 96 சதவிகிதத்தினர் விதைத்த 20- 40-ஆவது நாள்களில் கைக்களை எடுக்கின்றனர்.  எஞ்சிய 4 சதவீதத்தினர் மட்டுமே களைக்கொல்லியைப் பயன்படுத்துகின்றனர்.   
சிவப்பு கம்பளிப் புழு: சிவப்பு கம்பளிப் புழுக்களை விளக்குப்பொறி வைத்து, கவர்ந்து அழிக்கலாம். புழுக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 300 மி.லி. மருந்தை ஒட்டுத் திரவத்துடன் கலந்து தெளிக்கவும்.
அசுவிணி:இவை இலை, தண்டு, பூ, விழுதுகளில் உள்ள சாற்றினை உறிஞ்சி வாழ்கின்றன. அசுவிணியைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 20,000 வீதம் கிரைசோபா இரைவிழுங்கிகள் வீதம் விடலாம். 
பொறிவண்டுகள்: சிர்ஃபிட் குளவிகள், கண்ணாடி இறக்கைப் பூச்சிகள் முதலிய பூச்சிகளும், சில ஒட்டுண்ணிகளும் அசுவிணிகளைக் கொன்று உண்ணுகின்றன.
இலைப்பேன்: குஞ்சுகளும், வளர்ந்த பூச்சிகளும் அரம் போன்ற வாயினால் இலைகளைச் சுரண்டி சாறை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால் இலைப் பரப்புகள் வெள்ளையாக திட்டுத் திட்டாகத் தோற்றமளிக்கும். 
கட்டுப்படுத்தும் முறைகள்: 30 நாள்களுக்குள்பட்ட நிலக்கடலை இளந்தளிர்களில் செடிக்கு 5 பூச்சிகள் காணப்பட்டால், ஏக்கருக்கு குயினால்பாஸ் 560 மி.லி. என்ற அளவில் உபயோகிக்கவும். 
அறுவடை: காய்கள் நன்றாக முதிர்ச்சியடைந்த பின்னர் ஆள்களைக் கொண்டு செடிகளைப் பறித்துக் காய்களைப் பிரிக்கின்றனர். உழவர்கள் இயந்திர அறுவடையை பெரும்பாலும் பின்பற்றுவது கிடையாது. இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் நிலக்கடலையில் மகசூல் ஏக்கருக்கு 860 கிலோ பெமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com