தென்னையில் எலி, மர நாய்களை கட்டுப்படுத்தும் வழிகள்

தென்னையைத் தாக்கி சேதப்படுத்தக்கூடிய விலங்கினங்களில் முதலிடத்தில் இருப்பது எலிகள் தான். அதனால், தென்னந்தோப்புகளில்
தென்னையில் எலி, மர நாய்களை கட்டுப்படுத்தும் வழிகள்


பெரம்பலூர்:  தென்னையைத் தாக்கி சேதப்படுத்தக்கூடிய விலங்கினங்களில் முதலிடத்தில் இருப்பது எலிகள் தான். அதனால், தென்னந்தோப்புகளில் எலிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. எலிகள் சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த உலகத்தில் தோன்றிவிட்டது.

அனைத்து விதமான தட்பவெப்ப நிலையிலும், சுற்றுச் சூழலிலும் உயிர் வாழும் உடல் அம்சங்கள் எலிக்கு உண்டு. எலிகளுடைய இனப்பெருக்க ஆற்றல் மிக அதிகம். ஒரே பிரசவத்தில் 20 குட்டிகள் வரையும், ஆண்டுக்கு 8 முறை குட்டி ஈனும் தன்மையும் எலிக்கு உண்டு. இந்த அளவில்லாத இனப்பெருக்க ஆற்றல் பெற்றிருப்பதால் எலிகளை சுலபமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது:

நாற்று பருவத்தில் தென்னங்கன்றின் வேர் பகுதிகளை எலி கடித்து சேதப்படுத்துவதோடு, தென்னை நாற்றுகளின் நடு குருத்து மற்றும் ஓலைகளின் அடி தண்டு பகுதிகளைக் கடித்து உண்ணும். எலிகள் தென்னை மரத்தில் இருக்கும் இளம் காய்களை கடித்து சேதப்படுத்தும். இதனால் பெருத்த மகசூல் இழப்பு ஏற்படும்.
பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரையிலும் எலிகளின் தாக்குதல் அதிகளவில் இருக்கும்.

பெரும்பாலும் இளநீர் காய்களை எலி விரும்பும். விரியாத பூம்பாளை, பெண் பூக்கள் போன்றவற்றையும் கடித்து சேதப்படுத்தும். தென்னை மர எலி, தென்னை மரத்தின் தலைப் பகுதியில் குடியிருக்கும். மரத்தைவிட்டு கீழே இறங்கி வருவதில்லை. தென்னை ஓலைகள் வழியாக மரத்துக்கு மரம் தாவி சேதப்படுத்தும். இந்த எலிகளின் நடமாட்டம் இரவு நேரத்தில் தான் இருக்கும். பகல் நேரத்தில் இருக்காது. மரச் சுண்டெலி என்னும் ஒருவகை எலியும் தென்னை மரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மரச் சுண்டெலி உடம்பின் மேல்பகுதி இளஞ்சிவப்பு நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

மரச் சுண்டெலி தென்னை மரத்தின் தலைப்பகுதியில் கூடுகட்டி பூம்பாளைகளையும், இளநீர்க் காய்களையும் கடித்து சேதப்படுத்தும். கருப்பு எலி எனப்படும் ஒருவகை எலி வீடுகளில் அதிகமாக இருக்கும். இவ்வகை எலிகள் தென்னை மரத்தில் ஏறி இளநீர்க் காய்களையும், முதிர்ந்த தேங்காயையும் கடித்து சேதப்படுத்தும். வயலில் இருக்கக்கூடிய வயல் எலி தென்னை நாற்றுகளை கடித்து சேதப்படுத்தும். சொட்டு நீர் குழாய்களையும் இந்த எலி சேதப்படுத்தும்.

எலித்தொல்லைகளிலிருந்து தென்னை மரத்தைப் பாதுகாக்க சரியான இடைவெளி அதாவது வரிசைக்கு வரிசை 25 அடி மற்றும் மரத்திற்கு மரம் 25 அடி இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.  தென்னை மரத்தின் தலைப்பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்து ஓலை இடுக்குகளில் இருக்கும்  எலிக்கூடு, பன்னாடை போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். தென்னை மரத்தின் தண்டுப் பகுதியை தரைமட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் கருப்பு பாலித்தீன் தாளை சுற்றி கட்டிவைக்கலாம். இந்த பாலித்தீன் தாள் வழவழப்பாக இருப்பதால் இதன்மீது எலிகளால் ஏறிச் செல்ல முடியாது. 
தோப்பில் 10 மரத்திற்கு ஒரு மரம் வீதம் பாலித்தீன் தாளைச் சுற்றி கட்டிவைத்தால், அதனைப் பார்த்த எலிகள் பயம் கொண்டு தோப்பிலிருந்து வெளியேறி விடும். எலிகளைக் கொல்லக்கூடிய ஜிங் பாஸ்பைடு மற்றும்  புரோமோடையலான் போன்ற எலி  கொல்லிகளை தென்னை மரங்களின் தலைப்பகுதியில் வைக்கலாம். இவற்றை ஒருமுறை சாப்பிட்டாலே எலிகள் இறந்துவிடும்.

ஒரு வாளியில் 4 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் 200 கிராம் புதிய தேங்காய் பிண்ணாக்கைக் கரைத்து வாளியை தென்னை மரத்தின் தலைப்பகுதியில் ஒரு மட்டையில் கட்டிவிட்டால், தென்னைமரத்தில் கூடுகட்டி வாழுகின்ற எலிகள் பிண்ணாக்கு வாசத்தால் கவரப்பட்டு கரைசலில் விழுந்து இறந்துவிடும். செங்காய் பதத்தில் இருக்கும் பப்பாளிக் காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தென்னந்தோப்பில் ஆங்காங்கே வைத்துவிட்டால் இந்த பப்பாளி துண்டுகளைக் கடித்து சாப்பிடும் எலிகளின் பற்களில் பப்பாளிபால் ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு பால் ஒட்டுவதால் பற்களில் கூச்சம் ஏற்பட்டு வேறுபொருள்களைக் கடிக்க முடியாமல் பற்கள் அதிகமாக வளர்ந்து உணவு உட்கொள்ள முடியாமல் இறந்துவிடும். 

கோதுமை சப்பாத்தியின் இரண்டு பக்கத்திலும் தேன் அல்லது வெல்லப் பாகினைத் தடவி சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்து, அவற்றில் சிமென்ட் தூள் சிறிதளவு இட்டு புரட்டி எடுத்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.
100 கிராம் நிலக்கடலை பருப்பையும், 100 கிராம் எள்ளையும் ஒன்றாக கலந்து இடித்து பொடியாக்கி, அதனுடன் சிறிதளவு வெல்லப்பாகு கலந்து நன்றாக கிளறிவிட வேண்டும். அதனுடன், 50 கிராம் சிமென்ட் தூள் சேர்த்து நன்றாக கலக்கி சிறு, சிறு உருண்டையாக உருட்டி தென்னை மரத்தின் மட்டை இடுக்குகளிலும், தென்னந்தோப்பில் இருக்கும் எலி வளைக்குள்ளும் வைக்கவேண்டும்.  இவற்றை சாப்பிடும் எலிகளின் வயிற்றுக்குள் சிமென்ட் சென்று எலிகள் இறந்துவிடும்.

பூவன் வாழைப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று கார்போ பியூரான் குருணைகளை திணித்து தென்னை மட்டை இடுக்குகளில் வைத்தால் பூவன் வாழைப்பழத்தின் மணத்திற்கு கவரப்பட்டு எலிகள் இந்தப் பழங்களை சாப்பிட்டு இறந்துவிடும். ஒரு தோப்பில் 5 அல்லது 6 தென்னை மரங்களில் இவற்றை வைத்தால் போதும்.
வாய் அகலமாக உள்ள பானையில் பாதி அளவுக்கு சாண கரைசலை நிரப்பி, அதன் மேல் பகுதியில் சிறிதளவு அரிசி சாதமிட்டு தென்னந்தோப்பில் ஆங்காங்கே மண்ணில் புதைத்துவைக்கலாம். இந்த சாதத்தை சாப்பிட வரும் எலிகள் சாணக் கரைசலில் மூழ்கி இறந்துவிடும். 

மரநாய் கட்டுப்பாடு: மர நாய் என்பது கீரிப்பிள்ளை இனத்தைச் சார்ந்தது. தென்னை மரத்தில் இருக்கும் இளநீரில் ஓட்டைபோட்டு இளநீரை குடித்துவிடும். மர நாயின் முகம் நரிபோன்றும், உடல் மற்றும் வால் கீரிபிள்ளை போன்றும் இருக்கும். மர நாயின் உடல் கரும்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். உடல் முழுவதும் முடிகள் அடர்த்தியாக வளர்ந்து, முதுகில் மூன்று பழுப்புநிற கோடுகள் இருக்கும். வால் நீண்டு அடர்த்தியான முடி கொண்டதாக இருக்கும். 

மரநாய் மிக வேகமாக ஓடக்கூடியது. ஒரே தாவலில் 20 அடி தூரம் வரை தாண்டக்கூடிய தன்மைகொண்டது. இந்த தன்மை இருப்பதால் ஒருதென்னை மரத்தில் ஏறும் மரநாய் கீழே இறங்காமலேயே மரத்துக்கு மரம் சுலபமாக தாவிச்செல்லும். ஒரு மரநாய் ஒரே நாளில் 8 முதல் 10 இளநீரை ஓட்டைபோட்டு சேதப்படுத்தும். இதனால் தேங்காய் மகசூல் வெகுவாகக் குறையும்.
இரும்பு கம்பியால் செய்யப்பட்ட பெரிய கூண்டுகளில் வாழைப் பழத்தை வைத்து மரநாயை தந்திரமாக சிக்கவைக்கலாம். எலிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் புரோமோடைலான் நச்சுச் துண்டுகளை தென்னை மரத்தின் இளநீர் குலையில் அடிப்பக்கத்தில் மட்டை இடுக்கில் வைக்கவேண்டும்.  இளநீரை குடிக்க வரும் மரநாய் இந்த நஞ்சு துண்டுகளை சாப்பிட்டு ரத்தக்குழாய் வெடித்து இறந்துவிடும்.

மரநாய் வாழைப் பழத்தை விரும்பி சாப்பிடும். அதனால், வாழைப் பழத்தில் அரை கிராம் அளவுக்கு கார்போபியூரான் குருணைகளை திணித்து மட்டை இடுக்குகளில் வைத்தால், இந்த பழத்தை சாப்பிட்டு மர நாய் இறந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com