கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விதானசெளதாவை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி

கர்நாடகத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி,  பெங்களூருவில் விதானசெளதாவை

கர்நாடகத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரி,  பெங்களூருவில் விதானசெளதாவை முற்றுகையிட முயன்ற கரும்பு விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொள்முதல் தொகையை வழங்காமல் சர்க்கரை ஆலைகள்கடந்த 4 ஆண்டுகளாகவே காலம் கடத்திவந்துள்ளன.  இந்த நிலையில், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி,  கடந்த ஒருவாரமாக விவசாயிகள் பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 
பெலகாவியில் உள்ள சுவர்ணவிதானசெளதாவின் நுழைவுவாயிலை உடைத்துகொண்டு லாரியில் கரும்புகளை ஏற்றி  உள்ளே நுழைந்த விவசாயிகளின் செயல் கடும் கண்டனத்துக்குள்ளானது.
இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை குண்டர்கள் என்று கூறி,  அவர்களை கைது செய்ய முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார்.  இதை பாஜகவும்,  விவசாய சங்கங்களும் கடுமையாக கண்டித்தன. 
விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு முதல்வர் குமாரசாமி விடுத்த வேண்டுகோளை நிராகரித்த விவசாயிகள், பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து விதான செளதாவை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலமாகப் புறப்பட்டனர். 
சுதந்திரப் பூங்கா அருகே வந்த விவசாயிகள் தங்களது குறைகளைக் கேட்க முதல்வர் குமாரசாமி வராததை கண்டித்து விதானசெளதாவுக்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.  இவர்களுக்கு அனுமதி மறுத்த போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், சுதந்திரப் பூங்காவில் திரண்ட விவசாயிகள் கர்நாடக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  அடுத்த 2 மணி நேரத்தில் விவசாயிகளை முதல்வர் குமாரசாமி சந்தித்து குறைகளை கேட்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தனர். 
அமைச்சரால் சமரசம்:  இதனிடையே, சுதந்திரப் பூங்காவுக்கு வருகை தந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பண்டேப்பா காஷெம்பூர் விவசாயிகளைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.  இதையடுத்து, முதல்வர் குமாரசாமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் கரும்புவிவசாயிகளை சந்தித்து பேசவுள்ளதால், போராட்டத்தை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.  இதைத் தொடர்ந்து,  பிரச்னைக்கு 2 வாரத்தில் தீர்வு காணாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக கரும்புவிவசாயிகள் சங்கத்தலைவர் பி.நாகேந்திரா தெரிவித்தார்.
முதல்வர் இன்று ஆலோசனை:  இதையடுத்து, அமைச்சர் பண்டேப்பாகாஷெம்பூர் செய்தியாளர்களிடம் கூறியது: -
ம.ஜ.த.-காங்கிரஸ் கூட்டணி அரசு விவசாயிகள் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது. பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதற்காக மிகுந்த சிரமங்களை எடுத்துள்ளது.  விவசாயிகளைத் தொடர்ந்து ஆதரிப்போம். கரும்புக்கு  ஆதரவு விலை வழங்குவதுதொடர்பாக விரைவில் முடிவெடுப்போம். 
நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தரும் பிரச்னை தொடர்பாக முதல்வர் குமாரசாமி தலைமையில்செவ்வாய்க்கிழமை விவசாயப் பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com