கர்நாடகத்தில் அரங்கேறும் கட்சித் தாவல் காட்சிகள்

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், பாஜகவினர் மாற்றுக் கட்சித் தாவும் காட்சிகள் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளன.


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், பாஜகவினர் மாற்றுக் கட்சித் தாவும் காட்சிகள் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளன.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் கர்நாடகத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தாம் சார்ந்திருக்கும் கட்சிகள் மீது அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சிகளின் இரண்டாம்கட்டத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் மாற்றுக் கட்சிகளை நாடி செல்லும் போக்கு விறுவிறுப்படைந்துள்ளது.
காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ. உமாஷ்ஜாதவ், கலபுர்கி தொகுதியில் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவுக்கு எதிராக பாஜக வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.
இதுபற்றி தம்மிடம் கூறவில்லை என்பதால் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் எம்.எல்.சி. கே.பி.சாணப்பா, பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இதே காரணத்துக்காக அம்மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக முன்னணித் தலைவர்கள் பாபுராவ்செüஹான், சாமராஜ்வியாட்டி உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி மார்ச் 18-ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸில் இணையவுள்ளனர்.
ஹாசன் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெüடாவை எதிர்த்து அரசியல் நடத்தி வந்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.மஞ்சு. மக்களவைத் தேர்தலில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுவதைத் தொடர்ந்து, ஹாசன் தொகுதியை மஜதவுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் மஜத வேட்பாளராக தேவெ கெüடாவின்பெயரன் பிரஜ்வல் போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஏ.மஞ்சு, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட தயாராகி வருகிறார். இவர், இரண்டொரு நாள்களில் பாஜகவில் சேருவது உறுதியாகியுள்ளது. ஏ.மஞ்சுவை பாஜகவில் சேர்த்துக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலர் காங்கிரஸில் சேர இருக்கிறார்கள்.
காங்கிரஸ் மீது அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பி.நாகேந்திரா ஆகியோர் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவில் இணையவிருப்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, பி.நாகேந்திராவின் சகோதரர் வெங்கடேஷை பெல்லாரி தொகுதியில் களமிறக்க பாஜக முடிவுசெய்துள்ளது. 
மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகை சுமலதாவுக்கு வாய்ப்பளிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி, நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட உள்ளனர். நடிகை சுமலதாவும் மார்ச் 18-ஆம் தேதி பாஜகவில் சேருவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட இருக்கிறார். பாஜக வேட்பாளராக சுமலதா அறிவிக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் பலர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது.
இதேபோல, கர்நாடகத்தின் பல மக்களவைத் தொகுதிகளில் கட்சி எடுத்துள்ள முடிவை எதிர்த்து பலரும் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com