நிகில், பிரஜ்வல் இருவரும் மக்கள் நலனுக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்: முதல்வர் குமாரசாமி

எனது மகன் நிகில், அண்ணன் மகன் பிரஜ்வல் இருவரும் ஆசைக்காக அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே

எனது மகன் நிகில், அண்ணன் மகன் பிரஜ்வல் இருவரும் ஆசைக்காக அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
ஹாசனில் வெள்ளிக்கிழமை ஹாசன் மக்களவைத் தொகுதியில் மஜதவேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவின் பெயரனும், அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் மக்கள்வெள்ளத்தில் ஊர்வலமாக வருகைதந்து வேட்புமனுதாக்கல் செய்தார். அப்போதுமுதல்வர் குமாரசாமி, அமைச்சர் ரேவண்ணா, அவரது மனைவி பவானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் முதல்வர் குமாரசாமி கூறியது: காங்கிரஸ் மற்றும் மஜத தொண்டர்கள் இடையே சிற்சில கருத்துவேறுபாடுகள் உள்ளன. இவை அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும். இரு கட்சிகளின் தொண்டர்களும் கூட்டணி தர்மத்தை பின்பற்றவேண்டும். 
நானும், எனது அண்ணன் ரேவண்ணாவின் செய்துள்ள மக்கள் பணிகளை தொடர்ந்து, எங்கள் குடும்பத்தை சேர்ந்த மேலும் இரு இளைஞர்கள்(பிரஜ்வல், நிகில்)கட்சி அரசியலில் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள். எனது மகன் நிகிலும், அண்ணன் மகன் பிரஜ்வலும் ஆசைக்காக அல்ல, மாறாக மக்கள் நலனுக்காக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். 
குடும்ப உறுப்பினர்களை போலமக்களின் நல்லது கெட்டதில் இருவரும் உடனிருப்பார்கள். அந்த உறுதியுடன் தான் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மக்களின் நலனுக்காக உழைப்பதில் எனது குடும்பத்தினர் உறுதியாக இருப்பதற்கு நான் சான்றாக இருக்கிறேன். மக்கள் நலன் தவிர, அமைப்புரீதியாக மஜதவை கட்டமைத்து பலப்படுத்துவதற்காகவும் நிகிலும், பிரஜ்வலும் தேர்தல்களம் கண்டுள்ளனர். 
எனது அரசு செயல்படுத்தியுள்ள மக்கள்நலத் திட்டங்களையே மக்களவை தேர்தல் பிரசாரத்தில் முன்வைத்து மக்களிடம் வாக்குகேட்கப் போகிறோம். கர்நாடகத்தின் நலன்கருதி மக்கள் நலன் சார்ந்துசிந்திக்கும் மஜத-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கர்நாடகத்தின் ஒட்டுமொத்தவளர்ச்சியே கூட்டணி அரசின் நோக்கமாகும்.
என் அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு போதுமான விளம்பரம் கிடைக்கவில்லை. எனினும், என் பணியில் முழுமையான திருப்தி உள்ளது. 2014-ஆம் ஆண்டில் இருந்ததுபோல தற்போதைய தேர்தலில் பிரதமர் மோடி அலை எதுவும் இல்லை. பிரதமர் மோடியின் பெயரில் பாஜகவினர் வாக்குதிரட்டுகிறார்கள். பிரதமர் மோடி அரசுக்கு கர்நாடகத்திற்கு செய்த நன்மைதான் என்ன? என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com