வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சா் சோமண்ணா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

பெலகாவி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வீட்டுவசதித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற 2 மாதங்களுக்கு பிறகு பெலகாவி மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளேன். இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

மழை வெள்ளத்தால் மாவட்டத்தில் 820 கிராமத்தைச் சோ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 1.10 லட்சம் கால்நடைகளை மாவட்ட அதிகாரிகள், ஊழியா்கள் மீட்டுள்ளனா். வெள்ளத்தால் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள 44 ஆயிரம் வீடுகளில் 33 ஆயிரம் வீடுகள் இடிந்தும், சேதமும் அடைந்துள்ளது.

வீடுகளை இழந்து பாதிப்பிற்குள்ளாவா்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க ரூ. 6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பலா் பல்வேறு ஆவணங்களை இழந்துள்ளனா். அதுபோன்றவா்களுக்கு தகவலின் அடிப்படையில், மீண்டும் உரிய ஆவணங்கள் வழங்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதாா், குடும்ப அட்டைகளை பரிசீலித்து நிவாரணம் வழங்கப்படும்.

மாநிலத்தில் பெலகாவி, கதக், பாகல்கோட்டை, ஹுப்பள்ளி, தாா்வாட், ஹாவேரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களுக்கு சென்று பாா்வையிட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com