அரசு தமிழ்ப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி!

பெங்களூரில் திம்மையா சாலையில் உள்ள 97 ஆண்டுகால பழைமையான அரசு தமிழ் நடுநிலைப் பள்ளியை மூடிவிட்டு, அப்பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு தமிழ்ப் பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி!

பெங்களூரில் திம்மையா சாலையில் உள்ள 97 ஆண்டுகால பழைமையான அரசு தமிழ் நடுநிலைப் பள்ளியை மூடிவிட்டு, அப்பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 சுதந்திரத்துக்குப் பிறகு 1956-ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் உருவான கர்நாடக மாநிலத்தின் எல்லைக்கோட்டில் வாழ்ந்து வரும் பெரும்பாலான தமிழர்களின் தலைமுறைகள், இங்கு நிலைபெற்ற வரலாறு ஓராயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையதாகும்.
 ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகள்
 கர்நாடகத்தின் பெங்களூரு, கோலார், மைசூரு உள்ளிட்ட பகுதிகளின் எல்லைப் பகுதிகளில் பெரும்பான்மையினராகத் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.
 பெங்களூரில் சிவாஜி நகர், அல்சூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 90 சதவீதம் மக்கள் தமிழர்களாக வாழ்ந்து வந்ததால், ஏராளமான தமிழ்ப் பள்ளிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கி, அதற்குரிய கட்டடங்களையும் கட்டி வைத்தனர். இவற்றில் கன்னடர்கள், தெலுங்கர்கள் உள்ளிட்ட பிற மொழியினரும் தமிழ் மொழியையே விரும்பி படித்தனர்.
 தமிழ்வழிப் பள்ளிகளுக்குப் பாராமுகம்
 இந்திய மொழிகளை பரந்த நோக்கோடு கட்டிக்காக்காமல், தமிழில் படிக்க மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தமிழ்ப் பள்ளிகளை படிப்படியாக, சப்தமில்லாமல் கர்நாடக அரசு மூடி வருகிறது. தமிழ்ப் பள்ளிகளில் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். ஆசிரியர்கள் பணி ஓய்வுபெற்றால் அந்தப் பணியிடத்தை நிரப்பாமல் கிடப்பில் போட்டனர்.
 கன்னடம் படித்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று எழுதப்படாத சட்டத்தை அமல்படுத்தினர். உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு மறுப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது.
 97 ஆண்டு பள்ளியில் அடிப்படை வசதிகளும் இல்லை
 இந்த அவலத்தின் முழுமையான உதாரணமாக, இந்தியாவின் மென்பொருள் தலைநகரான பெங்களூரின் இதயமாக விளங்கும் சிவாஜி நகர், திம்மையா சாலையில் உள்ள அரசு தமிழ் நடுநிலைப் பள்ளி விளங்கி வருகிறது.
 ஏறத்தாழ ஒரு ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்துள்ள தமிழ்ப் பள்ளியின் நுழைவுவாயிலில் குப்பைக்கூளங்களும், மாடுகளும் மாணவர்களை வரவேற்கக் காத்திருக்கின்றன. 1922-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் திம்மையா ரோடு இந்து பெண்கள் பள்ளி என்று தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியின் 97 ஆண்டுகால பழமையான கட்டடம் முழுமையாகச் சிதைந்துள்ளது.
 பள்ளிக்காக கட்டடப்பட்ட அழகிய கட்டடங்கள் போதுமான பராமரிப்பின்றி மாணவர்களின் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் கேட்பாரற்று மூடப்பட்டுள்ளன.
 இந்தக் கட்டடங்களைச் சீரமைப்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட புதிய கட்டடத்தின் ஒரு அறைகளில் தான் மாணவர்கள் கல்வி கற்று வருகிறனர். 1949-ஆம் ஆண்டுவாக்கில் 1,500 மாணவர்கள் படித்துவந்த இந்தப் பள்ளியில், தற்போது ஒப்புக்கு 16 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு கல்வி போதிக்க இரண்டு தமிழாசிரியர்கள், ஒரு கன்னட ஆசிரியர், ஒரு உதவியாளர் இருக்கின்றனர்.
 பள்ளியின் சுற்றுச்சுவர் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு தினமும் அத்துமீறல்களால் அசிங்கங்கள் அரங்கேறி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
 மாடுகள் மேய்ந்து காய்ந்து போன நிலத்தில் சிகரெட், பீடி, மதுபாட்டில்கள் மண்டிக் கிடக்கின்றன. இது பள்ளி வளாகமா? சமூக விரோதிகளின் கூடாரமா? என்று கூறுமளவுக்கு நிலைமை கெட்டுக் கிடக்கின்றன.
 இதுகுறித்து அப்பகுதி தமிழ் மக்கள், பள்ளிக் கல்வித் துறை, காவல் துறைக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறைகூறுகிறார்கள்.
 மதிய உணவுக்கு பிறகு தாகம் தீர்க்க குழந்தைகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைத்தாலும் அதற்கு கட்டணம் செலுத்த பள்ளிக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அரசுப் பள்ளி தத்தெடுப்புத் திட்டத்தின்கீழ் பள்ளியை சீரமைத்து நடத்துவதற்கு தன்னார்வலர்கள் பலர் முன்வந்தும் அதற்கு கர்நாடக அரசு அனுமதி அளிக்கவில்லை.

பள்ளிகளில் சமூக விரோதச் செயல்கள்
 தமிழ்ப் பள்ளிகளில் பள்ளி நேரம் முடிந்ததும் சமூக விரோதிகளின் ஆதிக்கத்துக்கு ஆளாகின. பள்ளி வளாகங்களின் அத்துமீறி நுழைவது, மாடுகளை கட்டிவிடுவது, குப்பைக்கூளங்களை கொட்டி தீர்ப்பது, வாகனங்களை நிறுத்திக்கொண்டு வம்பு செய்வது, சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி பள்ளியின் புனிதத்தை சீர்குலைப்பது என சட்டவிரோத நடவடிக்கைகள் தினமும் அரங்கேறி வருகின்றன. கட்டடங்கள் சிதிலமடைந்ததால் பள்ளியின் நோக்கமும் சிதைந்து, கர்நாடகத்தில் உள்ள குறிப்பாக பெங்களூரில் இருந்த பள்ளிகள் அதன் இருப்பை இழந்து வருகின்றன.
 பள்ளியை மூட முயற்சி
 அடர்ந்த கட்டடங்கள் அமைந்திருக்கும் பகுதியில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் துணையுடன் 97 ஆண்டுகால பழமையான தமிழ்ப் பள்ளிக்கு மூடுவிழா நடத்திவிட்டு, ஏறத்தாழ ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஒரு சிலர் தீவிரமாக முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார், மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் ஆகியோருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என தலித் சங்கர்ஷ சமிதியின் மாவட்டக்குழு தொழிலாளர் பிரிவு அமைப்பாளர் ஏ.சரவணா தெரிவித்தார்.
 இந்தப் பள்ளியைக் காப்பாற்ற கடைசிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கர்நாடக தமிழ்ப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் அ.தனஞ்செயன், ஆலோசகர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமாரை திங்கள்கிழமை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com