நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் தர்ஷன், யெஷ் பிரசாரம்
By DIN | Published On : 14th April 2019 05:00 AM | Last Updated : 14th April 2019 05:00 AM | அ+அ அ- |

மண்டியா, ஏப்.13: நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக நடிகர்கள் தர்ஷன், யெஷ் ஆகியோர் பிரசாரம் செய்தார்கள்.
மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக மண்டியாவின் பல்வேறு கிராமங்களில் நடிகர்கள் தர்ஷன், யெஷ் உள்ளிட்டோர் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார்கள்.
ஸ்ரீரங்கப்பட்டணா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் தர்ஷனுக்கு வலது கையில் வலி அதிகமாகக் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரசாரத்தை நிறுத்துவிட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது:
மண்டியா மக்கள், இத்தொகுதியின் பெருமைகளை தங்களது வாக்குகள் வாயிலாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும். தேர்தலில் விலை போகும் பொருள்களாக மாறிவிடக் கூடாது. தங்களது வாக்கை விற்கும் மனிதர்களைக் காட்டிலும் விலங்குகளே மேலானவை. மண்டியா மக்கள் தங்கள் சுயமரியாதையை விட்டுத் தரக் கூடாது. நடிகர்களை காண வருகை தரும் ரசிகர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதாவுக்கு ஆதரவாக ரசிகர்களாகிய நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எந்த நேரத்திலும் வாக்குரிமையை விலை பொருளாக்கிவிடாதீர்கள். எங்கெங்கிருந்தோ அம்பரீஷ் ரசிகர்கள் மண்டியாவுக்கு வந்து சுமலதாவுக்கு வாக்குச் சேகரிக்கிறார்கள். முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் எங்கள் மீது வாரி இறைக்கும் சேற்றை நாங்கள் துடைத்துக் கொள்கிறோம். ஆனால் ஏப்.18ஆம் தேதி அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட சுமலதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
மண்டியாவின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்த நடிகர் யெஷ் கூறியது: விவசாயிகளின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமானால், அது நடிகை சுமலதாவால் மட்டுமே முடியும். மண்டியா மக்களின் வளர்ச்சியை மனதில் கொண்டே சுமலதா இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவரது எண்ணத்தை நனவாக்க சுமலதாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.குறிப்பாக பெண்களை அவமதித்துவரும் முதல்வர் குமாரசாமிக்கு தக்க பாடம் புகட்ட சுமலதாவுக்கு வாக்களிக்க வேண்டும். சுமலதாவுக்கு அளிக்கும் வாக்கு அம்பரீஷுக்கு செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல, மண்டியா மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவதாகும் என்றார் அவர்.
இதனிடையே, முதல்வர் குமாரசாமி மேலுகோட்டையிலும், மஜத வேட்பாளர் நிகில் குமாரசாமி மண்டியாவிலும் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தனர். சுயேச்சை வேட்பாளரான சுமலதா, மத்தூர் நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.