ராணுவ வீரர்களை அவமதிக்கவில்லை: முதல்வர் குமாரசாமி
By DIN | Published On : 14th April 2019 05:01 AM | Last Updated : 14th April 2019 05:01 AM | அ+அ அ- |

ராணுவ வீரர்களை நான் அவமதிக்கவில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மைசூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நான் தூண்டுவிட்டு தொண்டர்களை ஏவி தாக்குவேன் என்ற பயத்தால் மத்திய ஆயுத காவல் படை (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பைக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மண்டியா மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா கடிதம் கொடுத்திருக்கிறார். வேட்பாளரைத் தாக்கும் கலாசாரத்துக்கு நாங்கள் சொந்தக்காரர்கள் அல்ல. நடிகை சுமலதா, தேர்தல் பிரசாரத்தின்போது இசட் பிளஸ் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம். பிரதமர் மோடியிடம் கூறி அமெரிக்காவுக்கு பேசச் சொல்லி, அமெரிக்க கமாண்டோ படையின் பாதுகாப்பையும் சுமலதா பெறலாம்.
கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும், ஏழ்மையில் வாடியிருப்பவர்களும் தான் வேலைவாய்ப்புக்காக ராணுவத்தில் சேருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்தை பிரதமர் மோடி, பாஜகவினர் திரித்து விமர்சித்து வருகிறார்கள். நமது நாட்டின் ராணுவ வீரர்களை நான் அவமதிக்கவில்லை. மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதன் விளைவாக, ஏழை இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்திருந்தேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்புலம் கொண்ட ராணுவவீரர்கள் தான் நமது எல்லையைப் பாதுகாத்து வருகிறார்கள். எனவே, அவர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் என்று பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டேன். இதில் தவறொன்றுமில்லை என்றார் அவர்.
கர்நாடக மாநிலம், கங்காவதியில் வெள்ளிக்கிழமை நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தில் சேருகிறார்களே தவிர, இருவேளை உணவு கிடைக்காததால் யாரும் ராணுவத்தில் சேரவில்லை என்று கூறியிருந்தார்.