மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது: கர்நாடகத்தின் 14 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 


மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 
17-ஆவது மக்களவைக்கான தேர்தல் நாடெங்கும் பல்வேறு கட்டங்களில் நடந்துவருகின்றன. கர்நாடகத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 
பிரசாரம் ஓய்ந்தது: வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பகிரங்க பிரசாரம் முடிவடைய வேண்டும் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் விதியாகும். இதன்படி, அரசியல் கட்சிகளின் பகிரங்க பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி, பாஜக இடையே இருமுனை போட்டி நிலவுவதால் அக்கட்சிகளின் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, மைசூர், சாமராஜ்நகர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மாநிலத் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், மாநில அமைச்சர்கள்
டி.கே.சிவக்குமார், கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 
அதேபோல, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, தாவணகெரே, தும்கூரு ஆகிய தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை திறந்த வேனில் சென்று வாக்குச் சேகரித்தார். பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், மாநில பொதுச்செயலாளர் அரவிந்த்லிம்பாவளி, முன்னாள் துணைமுதல்வர் ஆர்.அசோக், நடிகைகள் தாரா, மாளவிகா உள்ளிட்டோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். 
மஜத தேசியத் தலைவர் தேவெ கெளடா, தான் போட்டியிடும் தும்கூரு தொகுதியில் முகாமிட்டு வாக்குசேகரித்தார். முதல்வர் குமாரசாமி தனது மகன் நிகில்குமாரசாமி மஜத வேட்பாளராக போட்டியிடும் மண்டியாவில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மஜதவை சேர்ந்த அமைச்சர்கள் புட்டராஜூ, சா.ரா.மகேஷ், எம்பி சிவராமேகெளடா போன்ற தலைவர்கள் மஜத வேட்பாளர்களை  ஆதரித்து வாக்குச் சேகரித்தனர். 
மண்டியாவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா, மண்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்குகளை திரட்டினார். இந்த கூட்டத்தில் நடிகர்கள் தர்ஷன், யெஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த இருவாரங்களாக சூடுபறக்கும் குற்றச்சாட்டுகள், பரஸ்பர விமர்சனங்கள், தனிப்பட்ட சாடல்கள் கொண்டதாக அனல்பறக்க நடைபெற்ற பகிரங்க பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தாலும், வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிக்க தடையில்லை. 
எனவே, அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் புதன்கிழமை வாக்காளர்களை வீடுவீடாக சென்று வாக்குச்சேகரிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு:உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுர்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வடபெங்களூரு, மத்திய பெங்களூரு, தென் பெங்களூரு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் மொத்தம்241வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்டத்தேர்தலில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா தும்கூரு தொகுதியிலும், முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் மண்டியா தொகுதியிலும், அமைச்சர் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ஹாசன் தொகுதியில், நடிகர் பிரகாஷ்ராஜ் மத்தியபெங்களூரு தொகுதியிலும், நடிகை சுமலதா மண்டியா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் கைசின்னத்திலும், பாஜக வேட்பாளர்கள் தாமரை சின்னத்திலும், மஜத நெற்கதிரை சுமக்கும் பெண் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இதனிடையே, மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகை சுமலதா எக்காளமிடும் வீரன் சின்னத்திலும், நடிகை பிரகாúஷ்ராஜ்விசில் சின்னத்திலும்களமிறங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com