காங்கிரஸிலிருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: ரமேஷ் ஜார்கிஹோளி

 காங்கிரஸிலிருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.


 காங்கிரஸிலிருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, உமேஷ்ஜாதவ், மகேஷ் குமட்டஹள்ளி, பி.நாகேந்திரா ஆகிய 4 பேரும் கட்சித் தலைவர்கள் மீது அதிருப்தியடைந்து, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம், பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். 
இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு 4 பேரையும் கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பதவிநீக்கம் செய்யக் கோரி பேரவைத் தலைவர் ரமேஷ்குமாரிடம் அக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சித்தராமையா புகார் அளித்திருந்தார். இதனிடையே, எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய உமேஷ்ஜாதவ், பாஜகவில் இணைந்து கலபுர்கி மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். 
இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து களமிறங்கி, தீவிர தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். இதனிடையே, கோகக் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி, கடந்த சில நாள்களுக்கு முன்பாக தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை நடத்தி, சிக்கோடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் ஹுக்கேரிக்கு பதிலாக, அத்தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணா சாஹிப் ஜொள்ளேவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற கேட்டுக் கொண்டிருந்தார். 
இதனிடையே, ரமேஷ் ஜார்கிஹோளியின் சகோதரரும், வனத் துறை அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோளி, சில நாள்களுக்கு முன்பு,ரமேஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரைமறைவில் இருந்து வேலை செய்வதற்கு பதிலாக, வெளிப்படையாக வெளியே வந்து, கட்சியில் இருந்துவிலகி, பாஜகவில் இணைந்துவிட்டு தேர்தல் பணியாற்றலாம். இருளில் ஒளிந்துகொண்டு, கட்சியின் மீது கல்லெறிவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. சிக்கோடி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ்ஹுக்கேரிக்கு பதிலாக, பாஜக வேட்பாளர் அண்ணாசாஜிப் ஜொள்ளேவுக்கு ரமேஷ் ஜார்கிஹோளி தேர்தல் வேலை செய்துவருகிறார். கட்சியின் வழிகாட்டுதல்களை மீறி இவ்வாறு அவர் செயல்பட்டு வருகிறார் என்றார்.
இதற்கு பதிலடியாக, பெலகாவியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் ஜார்கிஹோளி,நான் இன்னும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இன்னும் நான் ராஜிநாமா செய்யவில்லை. இருட்டில் இருந்து ஒருவரை தாக்குவதற்கு நான் கோழையல்ல. சதீஷ் ஜார்கிஹோளி தனது நிதானத்தை இழந்து பேசி வருகிறார் என்றார். 
இதனால் பெலகாவி மாவட்ட காங்கிரஸில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கட்சியில் விரிசல் மேலும் விரிவடையும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com