பாஜக ஆசைப்படுவது போல கூட்டணி அரசு கவிழாது: அமைச்சர் பண்டேப்பா காஷெம்பூர்
By DIN | Published On : 27th April 2019 05:13 AM | Last Updated : 27th April 2019 05:13 AM | அ+அ அ- |

பாஜக ஆசைப்படுவது போல கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது என்று மஜதவைச் சேர்ந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் பண்டேப்பா காஷெம்பூர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு பதவி ஏற்றது முதல், பாஜக தொடர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆட்சியை கவிழ்க்க தசரா, தீபாவளி, பொங்கல் என தொடர்ந்து கெடு விதித்து வருகிறது. என்றாலும் கூட்டணி அரசு கவிழாமல் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், மீண்டும் ஆட்சிக் கவிழும் என பாஜக மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆட்சியைக் கவிழ்ப்பது அவர்களது கனவாக இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடரும். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், மஜத கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் மட்டுமில்லாது, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கும் என்றார்.
மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரமேஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் கட்சியை விட்டு விலக மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பார். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் ஜூன் மாதத்திற்குள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 2600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ. 2 ஆயிரம் கோடி வரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய வங்கிகளிலும் ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கும் உரிய ஆவணங்கள் பெற்று விவசாயிகளின் கடன் படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும் என்றார்.