தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்: விஞ்ஞானி வி.டில்லிபாபு

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் தலையாயக் கடமையாகும்

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அனைவரின் தலையாயக் கடமையாகும் என்று ராணுவ ஆராய்ச்சி- மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தார்.
மைசூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  உலக நட்பு தின விழாவில்,  அவர் பேசியது: ஆளில்லா விமானத்தின் என்ஜினைத் தயாரிக்கும் வேலையில் பணிக்கப்பட்டுள்ளேன். இந்தப் பணி அடுத்த  2 ஆண்டுகளில் நிறைவடையும்.  அது சாத்தியமாகும்போது ஆளில்லா விமானத்தை தயாரித்த 5?-ஆவது நாடாக இந்தியா உயரும். அந்தப் பணியில் தமிழாகிய எனது பங்களிப்பும் இருக்கும் என்பது பெருமை அளிக்கிறது.
மற்ற மொழிகளைப் போலவே, தமிழையும் மொழியாக மட்டுமே பலர் பார்த்துவருகிறார்கள். ஆனால் தமிழ் என்பது செறிவான மொழிமட்டும் அல்ல, அது ஒருவாழ்வியல்முறையாகும். 
தமிழ் மருத்துவம், தமிழ் சமையல், தமிழ் வேளாண்மை, தமிழ் உணவு போன்ற வேர்கள் தமிழில் விரவி கிடக்கின்றன. தமிழ் வாழ்வியலை அப்படியே விட்டுவிடாமல், அதை முன்னெடுத்துசெல்லவேண்டும். 
முன்னோர்களின் அறிவொளியில் உருவான வாழ்வியல் முறையை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழர்களின் வாழ்வியல் தொடர்ச்சி பட்டுப்போகாமல் இருக்கும். அடுத்ததாக, நமதுமொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் தலையாயக் கடமையாகும். தமிழ்ச்சங்கங்கள், அமைப்புகளின் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும். 
இளைஞர்களுக்கு தகுந்தபடி செயல்பாடுகளை மாற்றி அமைத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இளைஞர்களும் ஆர்வமாகப் பங்காற்றுவார்கள். இளைஞர்களுக்கான தமிழ்த் தளமாக தமிழ் அமைப்புகள் மாற வேண்டும். 
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்புக்கான தகவல் பரிமாற்றம் தமிழ்ச் சங்கங்களில் நடக்க வேண்டும். இது போன்ற வேலைவாய்ப்புமுகாம்களை நடத்துவதில் உதவியாக இருக்கத் தயாராக இருக்கிறேன். அதேபோல, நான் தொடங்கியுள்ள எல்லையில்லா பொறியாளர் அமைப்பின் வாயிலாக ஆய்வுக்கோவைகளை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முற்பட்டுவருகிறோம். 
சூரியஒளி, உயிரிகழிவறை போன்றவசதிகளை ரூ.2 லட்சம் செலவில் செய்துதரவும் தயாராக இருக்கிறோம். இந்தவாய்ப்புகளை தமிழ் அமைப்புகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி பேசுகையில், "தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். தமிழர்களின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் நிலைகள் முன்னேற்றம் அடைய வேண்டும். விவசாயத்தில் தமிழர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும்" என்றார் அவர். 
நிகழ்ச்சியில் அந்தமான் தமிழ்ச் சங்கத் தலைவர் காளைராஜன், பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், முன்னாள் நிர்வாகிகள் மு.சம்பத், அமுதபாண்டியன், கார்த்தியாயினி, ராமசந்திரன், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் துணைத் தலைவர் இரா.வினோத், இந்தியப் பேனா நண்பர் பேரவை செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவக்குமார், தார்வாட் மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் அ.தனஞ்செயன், கர்நாடகத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளர் எம்.பி.சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com