மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ சித்தராமையாவே முக்கிய காரணம்: எச்.விஸ்வநாத்

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவே முக்கிய காரணம்

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவே முக்கிய காரணம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
மைசூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசியல் சூறாவளிக்கு "ஆபரேஷன் கமலா'  தான் காரணமாகும்.   ஒரு சிலர் கூறுவது போல, மதவாதம், மதச் சார்பின்மை என்பதெல்லாம் போலியானது.   ஒரு காலத்தில் பாஜகவை மதவாதக் கட்சி என்று நான் கூறியது உண்மைதான்.  ஆனால், அந்தக் கருத்தியல் தவறானது என்பதை உணர்ந்துவிட்டேன்.
பாஜகவில் சேரவேண்டுமென்று விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ஏற்கவும் இல்லை,  நிராகரிக்கவும் இல்லை.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்வதற்கு அதில் அங்கம் வகித்த பலர் தான் காரணமானவர்.  இரு கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களால்தான்,  கூட்டணி அரசு வீழ்ந்தது. ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்களால்தான் அரசு கவிழ்ந்ததாக பொதுமக்களிடையே கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. 
கூட்டணி அரசின் முதலாளி போல செயல்பட்ட சித்தராமையா போன்றோர் தான் கூட்டணி அரசின் அழிவுக்கு முக்கிய காரணமாவர். 
பணத்தாசையால் அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை.  பெரும்பாலான அதிருப்தி எம்எல்ஏக்களின் சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது.  கூட்டணி அரசின் செயல்பாடுகள் என் மனதை மிகவும் பாதித்தன.  அதனால்தான்பதவியை ராஜிநாமா செய்தேன். 
என்மீது முதிர்ச்சியற்ற குற்றச்சாட்டுகளை கே.ஆர்.நகர் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சா.ரா.மகேஷ் கூறியிருக்கிறார்.  நல்ல பெயர் எடுப்பதற்காக சட்டப் பேரவையில் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.  முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அரவணைப்பில் இருந்த இதுபோன்ற நபர்களால்தான் கூட்டணி அரசு வீழ்ந்தது.  தேர்தல் செலவுகளைக் கவனிப்பதற்காக அதிகப்படியான பணத்தை கடனாகப் பெற்றிருந்தது உண்மைதான். 
குமாரசாமியின் அறிவுறுத்தலின்பேரில் எனக்கு உதவ சா.ரா.மகேஷ் முன்வந்ததும் உண்மைதான்.  அதற்காக சட்டப்பேரவையில் தவறாகப் பேசுவது நியாயமாகாது. தன்னை கண்டிப்பானவராகக் காட்டிக்கொள்ளும் பேரவையின் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார்,அவையில் நான் இல்லாதபோது என்னைப் பற்றி பேச அனுமதித்தது சரியல்ல. இது அவையின்விதிகளை மீறிய செயலாகும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com