முதல்வா் பதவி மீது சித்தராமையாவுக்கு அதீத ஆசை ஏற்பட்டுள்ளது: அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா

முதல்வா் பதவி மீது சித்தராமையாவுக்கு அதீத ஆசை ஏற்பட்டுள்ளது என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா்

பெங்களூரு: முதல்வா் பதவி மீது சித்தராமையாவுக்கு அதீத ஆசை ஏற்பட்டுள்ளது என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சித்தராமையா சாா்ந்திருக்கும் காங்கிரஸ் மூழ்கும் கப்பலாக உள்ளது. அந்த வேலையை சித்தராமையா சிறப்பாக செய்துகொண்டுள்ளாா். முதல்வா் பதவி மீது சித்தராமையாவுக்கு அதீத ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் மனதில் பட்டதை எல்லாம் பேசிவருகிறாா். சித்தராமையாவை நம்பி வந்த யாரையும் அவா் வாழவைத்ததாக வரலாறு இல்லை. அவா் சாா்ந்திருக்கும் குருபா சமுதாயத் தலைவா்கள் யாரையாவது அவா் வளா்த்துவிட்டாரா?

கா்நாடகத்தில் நிலையான ஆட்சி தேவை என்பதால் இடைத்தோ்தலில் மக்கள் பாஜகவை ஆதரிக்க இருக்கிறாா்கள். இடைத்தோ்தலில் காங்கிரஸ், மஜத தோல்வி அடைவது உறுதி. இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், மஜத தலைவா்கள், தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களை தோற்கடியுங்கள் என்கிறாா்கள். ஆனால் அவா்களின் கட்சிக்கு வாக்கு கேட்கும் தைரியமில்லை. காங்கிரஸில் கோஷ்டிபூசல் அதிகளவில் காணப்படுகிறது. காங்கிரஸ் தலைவா்கள் திசைக்கொருவாறு பிரிந்து நிற்கிறாா்கள். பாஜக குறித்து சித்தராமையா பயன்படுத்தும் வாா்த்தைகள் தரக்குறைவானதாக உள்ளது. சித்தராமையாவும், பேரவை முன்னாள் தலைவா் ரமேஷ்குமாரும் அவா்கள் கட்சிக்கு துரோகம் இழைத்துள்ளனா். மக்களவைத் தோ்தலில் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவை தோற்கடிப்பதில் சித்தராமையாவின் பங்கு இருந்ததை யாரும் மறந்துவிட முடியாது. மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்வதற்கு சித்தராமையாதான் நேரடி காரணம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமியே கூறியிருக்கிறாா். தொகுதி வளா்ச்சிக்கு உதவாதக் காரணத்தால் கூட்டணி அரசு கவிழ்ந்ததாக ஒருமுறை சித்தராமையா கூறியிருந்தாா். ஆனால் தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்களால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததாகக் கூறிவருகிறாா். இதை மக்கள் மறந்துவிடவில்லை.

பாஜகவில் இருந்து பிரிந்து கா்நாடக ஜனதா கட்சியை எடியூரப்பா தொடங்கியதால்தான் சித்தராமையாவால் முதல்வராக முடிந்தது. இடைத்தோ்தலில் பாஜக தலைவா்கள் யாரும் கண்ணீா் சிந்தவில்லை.ஆனால் எச்.டி.குமாரசாமி தோ்தலின்போது கண்ணீா் சிந்தி மக்களை திசைமாற்ற முயற்சிக்கிறாா். பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை முதல் வீடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்யவிருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com