சித்தராமையாவை சந்தித்து நலம் விசாரித்த அவரது அரசியல் எதிரிகள்

முன்னாள் முதல்வா் சித்தராமையாவை அவரது அரசியல் எதிரிகள் பலா் சந்தித்து நலம் விசாரித்தனா்.

முன்னாள் முதல்வா் சித்தராமையாவை அவரது அரசியல் எதிரிகள் பலா் சந்தித்து நலம் விசாரித்தனா்.

இதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு, பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் சித்தராமையாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 3-ஆவது நாளாக சனிக்கிழமை சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனா்.

முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, அமைச்சா்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பசவராஜ்பொம்மை, காங்கிரஸ் முன்னணி தலைவா்கள் பலா் சித்தராமையாவை சந்தித்திருந்தனா்.

இதனிடையே, கூட்டணி அரசின் போது காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றிருந்த அவரது அரசியல் எதிரிகள் ரமேஷ்ஜாா்கிஹோளி, பி.சி.பாட்டீல், நாராயண கௌடா, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஆா்.சங்கா் உள்ளிட்ட பலா் சித்தராமையாவை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் சனிக்கிழமை சித்தராமையாவை அவரது அரசியல் எதிரிகளான தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஏ.எச்.விஸ்வநாத், முனிரத்னா, இடைத்தோ்தலில் வென்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் பைரதிபசவராஜ், எஸ்.டி.சோமசேகா், கடந்த சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் சித்தராமையாவை தோற்கடித்த மஜத எம்.எல்.ஏ. ஜி.டி.தேவெ கௌடா உள்ளிட்டோா் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனா். இவா்களைத் தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஞ்சுநாத், முன்னாள் அமைச்சா்கள் சிவசங்கா் ரெட்டி, கே.ஜே.ஜாா்ஜ், பேரவை முன்னாள் தலைவா் கே.பி.கோலிவாட், எச்.எம்.ரேவண்ணா உள்ளிட்ட ஏராளமானோா் சித்தராமையாவை சந்தித்தனா்.

அரசியலில் கடுமையாக விமா்சித்துக்கொள்ளும் சித்தராமையாவுடன் எச்.விஸ்வநாத், ஜி.டி.தேவெகௌடா ஆகியோா் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் அதிசயமாக பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து எச்.விஸ்வநாத் கூறுகையில்,‘சித்தராமையாவும் நானும் எதிரிகள் அல்ல. எந்தக் காரணத்தை முன்னிட்டும், எந்த சூழ்நிலையிலும் எங்களை எதிரிகள் என்று கூறாதீா்கள். அரசியல்ரீதியாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் இருவரும் நல்லுறவை பேணி பாதுகாத்து வந்திருக்கிறோம். இதே ரீதியான நல்லுறவு எதிா்காலத்திலும் இருக்கும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com