பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்கக் கூடாது

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்கக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில்,  அவர் பேசியது: 
பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு எந்த நாடும் தஞ்சம் அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக நாடுகளுக்கு இடையே கருத்தொற்றுமை உருவாக வேண்டிய காலம் வந்துள்ளது. இதுபோன்ற பொருளாதாரக் குற்றங்கள் நமது நாட்டின் சுகாதாரம்,  வளத்தின் மீது நேரடியான விளைவுகளை ஏற்படுத்தும்.
அண்மைக்காலமாக நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளின் செயல்பாட்டில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுவருவதை கவனிக்கிறோம். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றம்,  சட்டப்பேரவைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு நடத்தை விதிகளை வகுத்தளிக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டியதற்கான காலம் கனிந்துள்ளது. 
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இடையூறு ஏற்படுத்துவதே நடத்தையாக மாறியுள்ளது துரதிருஷ்டவசமானது. தேர்தல் வெற்றிக்காக ஜனரஞ்சகமான, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, குறுகியகால வாக்குறுதிகளை அரசியல்கட்சிகள் வழங்கக்கூடாது. இதுபோன்ற ஆக்கம் இல்லாத திட்டங்களால் நமது நாட்டின் நீண்டகால பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கும். 
அரசை சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டு, சொந்த காலில் நிற்க மக்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு பதிலாக அரசையே மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் நிலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு நிர்வாகம், சட்டப்பேரவை, நீதிமன்றங்களுக்கு இடையிலான நுணுக்கமான சமன்பாட்டை எப்போதும் கடைப்பிடிக்க தவறக் கூடாது. 
ஒருவரின் அதிகார வரம்பை மற்றவர் ஆக்கிரமிக்க முயலக் கூடாது. தத்தமது அதிகார வரம்புக்குள் செயல்படும்போது ஜனநாயகத்தின் சக்கரம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் சுமுகமாகச் செயல்படும். ஒருவரின் அதிகாரத்தில் மற்றொருவர் தலையிடக் கூடாது. 
உள்கட்டமைப்பு வளர்ச்சியில் காணப்படும் தேக்கநிலையைப் போக்குவதில் நமதுநாடு அக்கறை செலுத்தவேண்டியது அவசியமாகும். சாலைகள் கட்டமைப்பு, நெடுஞ்சாலை வலையங்கள் உருவாக்கம், துறைமுகங்கள்மேம்பாடு, மண்டல விமான போக்குவரத்து ஊக்குவிப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுமுயன்று வருகிறது. 
உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை விரைவுப்படுத்த அரசு-தனியார் கூட்டு திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும். பிறநாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை கையில் எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com