தனி அமைச்சர் இல்லாமல் தத்தளிக்கும் பள்ளிக் கல்வித் துறை

தனி அமைச்சர் இல்லாததால் தேர்வுக் காலம் நெருங்கி வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை தத்தளிக்கும் நிலைக்கு


தனி அமைச்சர் இல்லாததால் தேர்வுக் காலம் நெருங்கி வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கல்வி அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, பியூ கல்வி ஆகிய துறைகள் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த துறையை கவனித்து வந்த பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த என்.மகேஷ், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், இத்துறையை முதல்வர் குமாரசாமியே கவனித்து வருகிறார்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எஸ்எஸ்எல்சி, 2-ஆம் ஆண்டு பியூசி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கடந்த காலங்களில் 2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் வினாத்தாள் கசிந்துவிட்டதாக புகார்கள் எழுந்து, மறுதேர்வுகள் நடத்தப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இது போன்ற சூழ்நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்கு தனியாக அமைச்சர் இல்லாதது கல்வி அறிஞர்களை மட்டுமல்லாது, மக்கள் பிரதிநிதிகளையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பியூ கல்வித் துறைக்கும் தனி இயக்குநர் இல்லை. இதே நிலை நீடித்தால், தேர்வில் குளறுபடிகள் ஏதும் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுகுறித்து எம்எல்சி அருண்சஹாபூர் கூறுகையில், எஸ்எஸ்எல்சி, 2-ஆம் ஆண்டு பியூசி போன்ற தேர்வுகளுக்கான ஆயத்தப் பணிகள் அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. 
ஆனால், அதிகாரிகளை முடுக்கிவிட்டு வேலைவாங்குவதற்கு தனியாக அமைச்சர் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பியூசி தேர்வுகளில் வினாத்தாள் கசிவு நிகழாமல் தடுக்க வேண்டுமென்றால், அதற்கு தனியாக அமைச்சர் இருக்க வேண்டும். எனவே, பள்ளிக் கல்வித் துறைக்கு உடனடியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என்றார் அவர். 
முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-பாஜக கூட்டணி அரசில் முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவரும், எம்எல்சியுமான பசவராஜ் ஹோரட்டி கூறுகையில், தேர்வுகள் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையை கவனிப்பதற்கு தனியாக அமைச்சர் இல்லாதது சரியல்ல. தேர்வுகளில் ஏதாவது முறைகேடு நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? மாணவர்களின் வாழ்க்கையில் விபரீத விளையாட்டில் ஈடுபடுவது சரியல்ல. எனவே, உடனடியாக பள்ளிக் கல்வித் துறையை தனி அமைச்சரிடம் அளிக்க வேண்டுமென முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
பள்ளிக் கல்வித் துறை முதல்வர் குமாரசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தால், எங்கள் குறைகளை தீர்த்துக்கொள்வது கடினமாகும். எனவே, தனி அமைச்சருக்கு பள்ளிக் கல்வித் துறையை ஒப்படைக்க வேண்டும். 
முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு தனி அமைச்சர் இருப்பது அவசியமாகும். ஒருசில முடிவுகள் இயக்குநர்கள் அளவில் அல்லது துறை செயலர்கள் மட்டத்தில் எடுக்க இயலாது. புதிதாக அமைச்சரை நியமித்தாலும், இத்துறையை முழுமையாகப் புரிந்துகொள்ள 2 மாதங்கள் ஆகும். எனவே, தேர்வு நெருங்குவதற்கு முன்பே தனி அமைச்சரை நியமிப்பது அவசியம் என கர்நாடக மாநில அரசுப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com