கேளிக்கை விடுதிகளில் மீண்டும் உலா வரும் கர்நாடக அரசியல்

கர்நாடக அரசியல், கேளிக்கை விடுதிகளில் மீண்டும் உலா வரத் தொடங்கியுள்ளது.



கர்நாடக அரசியல், கேளிக்கை விடுதிகளில் மீண்டும் உலா வரத் தொடங்கியுள்ளது.
1969-இல் கட்சி உடையும் வரை கர்நாடகத்தில் தன்னிகரில்லா கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. அதன்பிறகு தேவராஜ் அர்ஸ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நீடித்து வந்தது. 1975-இல் அப்போதைய காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். இதன்விளைவாக, 1976-ஆம் ஆண்டு துண்டுதுண்டாக செயல்பட்டு வந்த சின்னசின்னக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஜனதா கட்சியாகப் பரிணமித்தன. இந்திரா காந்தி அரசியலில் நாட்டம் கொள்ளாத காங்கிரஸ் கட்சியினர் ஜனதா கட்சியை ஆதரிக்கத் தொடங்கினர். இதற்கு கர்நாடகம் விதிவிலக்கல்ல என்பதை 1983-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நிரூபித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஜனதா கட்சி, ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைத்தது. ஜனதா கட்சிக்கு 95, காங்கிரசுக்கு 82, பாஜகவுக்கு 18 இடங்கள் கிடைத்தன. பாஜகவின் ஆதரவில் ஜனதா கட்சி ஆட்சியை ராமகிருஷ்ண ஹெக்டே உருவாக்கினார். அன்று முதல் கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூழ்நிலை உள்ளது. 
எப்போதெல்லாம் அரசியல் குழப்பங்கள் தலைதூக்குகின்றனவோ, அப்போதெல்லாம் மாற்றுக் கட்சிகளிடம் இருந்து சொந்தக் கட்சி எம்எல்ஏக்களைக் காப்பதே அரசியல் கட்சிகளின் முழுநேர வேலையாகிவிட்டது. 1983, 1988, 1990, 1992, 2006, 2007, 2008, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் கர்நாடக அரசியல் குழம்பி நின்றபோது, சுற்றுலாத் தலங்களும், கேளிக்கை விடுதிகளும்தான் எம்எல்ஏக்களை பாதுகாப்பாக வைத்திருக்க அரசியல் கட்சிகளுக்கு கைகொடுத்துள்ளன. 2008-இல் தென்னிந்தியாவில் முதல்முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக, பெரும்பான்மை பலத்தைப் பெற 3 இடங்கள் குறைவாக இருந்தபோது, பிற கட்சிகளின் எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டது. ஆபரேஷன் தாமரை (பாஜகவுக்கு இழுப்பது) என்றழைக்கப்படும் எடியூரப்பாவின் அரசியல் உத்தியின்படி, மாற்றுக் கட்சி எம்எல்ஏவின் பதவியை ராஜிநாமா செய்யவைத்து, பாஜக வேட்பாளராக தேர்தலில் நிற்கவைத்து வெற்றி பெற வைப்பதாகும். 2008-இல் இந்தமுறையில் 16 எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து, பாஜக வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைத்தது. இதன்காரணமாக, அப்போது பாஜக தனது ஆட்சியின் பலத்தை 115 ஆக பெருக்கிக் கொண்டது. தற்போது அதேபோன்றதொரு அரசியல் விளையாட்டுக்கு பாஜக தயாராகி வருவது தெள்ளத் தெளிவாக புலப்படத் தொடங்கியுள்ளது. 104 எம்எல்ஏக்களின் பலத்தை வைத்துள்ள பாஜக, பெரும்பான்மை பலத்தைப் பெற 9 இடங்கள் குறைவாக உள்ளன. எனவே, காங்கிரஸ், மஜதவில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக வலைவீசி, பேரம் நடத்தி வருகிறது. இது பாஜகவுக்கு கைகொடுக்குமா? என்பது அடுத்த சில நாள்களில் தெரியும் என்றாலும், கர்நாடக அரசியல் மீண்டும் கேளிக்கை விடுதி நோக்கி நகர்ந்துள்ளது பொதுமக்களை எரிச்சலடையச் செய்துள்ளது.
கேளிக்கை விடுதி அரசியல்
1984-ஆம் ஆண்டு ஆந்திர மாநில முதல்வராக இருந்த என்.டி.ராமராவ், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது, எதிர்க்கட்சிகளின் வலையில் இருந்து காப்பாற்ற தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்களை, தனது நண்பரும் கர்நாடக முதல்வருமான ராமகிருஷ்ண ஹெக்டே உதவியுடன் பெங்களூரு அருகேயுள்ள நந்திமலையில் தங்க வைத்திருந்தார். அந்த ஆண்டு முதல்தான் கேளிக்கை விடுதி அரசியல் கர்நாடகத்தில் நுழைய ஆரம்பித்தது. 2002-இல் மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அழைத்து வந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தார். 
சட்டப்பேரவைத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை பலம் கிடைக்காதபோது, 2004-ஆம் ஆண்டு முதல் கேளிக்கை விடுதி அரசியலில் ஈடுபடுவதை கர்நாடக அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. 2006-ஆம் ஆண்டில் எச்.டி.குமாரசாமி, 2008-இல் எடியூரப்பா ஆட்சிகளின் போது அடிக்கடி கேளிக்கை விடுதிக்கு எம்எல்ஏக்களை அழைத்துச் செல்லும் அரசியல் சூழ்நிலை காணப்பட்டு வந்தது. எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் பாஜக எம்எல்ஏக்கள் குழுக்களாகப் பிரிந்து அடிக்கடி கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திக் கொண்டு கேளிக்கை விடுதியில் தஞ்சம் அடைந்து விடுவார்கள். 2011-இல் ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்காமல் சதானந்த கெளடாவை முதல்வராக்க வலியுறுத்தியும், 2012-இல் சதானந்த கெளடாவை நீக்கிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வலியுறுத்தியும் பாஜக எம்எல்ஏக்களை கேளிக்கை விடுதியில் தங்கவைத்தவரே எடியூரப்பாதான். எடியூரப்பாவுக்கு எதிராக சுரங்க அதிபர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கொதித்தெழுந்தபோதும் கேளிக்கை விடுதி அரசியல் தலைவிரித்தாடியது. பாஜக எம்எல்ஏக்களை ஜனார்த்தன ரெட்டி ஹைதராபாத்தில் தங்கவைத்திருந்தார். 2017-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தபோது, தனது எம்எல்ஏக்களை பாஜக இழுப்பதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், தங்கள் கட்சியின் 44 எம்எல்ஏக்களை பெங்களூருக்கு அருகே பிடதியில் உள்ள கேளிக்கை விடுதியில் தங்க வைத்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்திருந்தார்.

மீண்டும் கேளிக்கை விடுதி: மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ள அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா, தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ஹரியாணா மாநிலத்தின் குரு கிராமத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைத்துள்ளார். கடந்த 5 நாள்களாக அங்கு தங்கியுள்ள பெரும்பாலான பாஜக எம்எல்ஏக்கள் சனிக்கிழமை பெங்களூருக்கு திரும்பினார்கள். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடம் இருந்து தங்கள் எம்எல்ஏக்களைப் பாதுகாக்கவே ஹரியாணாவில் தங்கியிருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.
இதனிடையே, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தை நடத்திய அந்தக் குழுவின் தலைவர் சித்தராமையா, தங்கள் கட்சியின் 76 எம்எல்ஏக்கள் பெங்களூருக்கு வெளியே பிடதியில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க கேளிக்கை விடுதியில் தங்கியுள்ளதாக காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. எத்தனை நாள்களுக்கு கேளிக்கை விடுதியில் தங்குவார்கள் என்று தெரியவில்லை. எனினும், கர்நாடகத்தின் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் கேளிக்கை விடுதி அரசியலில் ஈடுபடுவது மக்களின் முகத்தை சுளிக்கவைத்துள்ளது. மஜத எம்எல்ஏக்கள் யாரும் கேளிக்கை விடுதிக்கு இதுவரை அழைத்துச் செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com